சகோதர, சகோதரிகளின் பாசத்தை உணர்த்தக்கூடிய, வெளிப்படுத்தக்கூடிய அற்புத திருநாள் தான் ராக்ஷா பந்தன். பெரும்பாலும் வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டாலும், இது உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டிய அற்புத நாள்.
ரக்ஷா பந்தன் கொண்டாடுவதன் நோக்கம்:
ரக்ஷா பந்தன் என்பது ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு, அவரின் மணிக்கட்டில் ராக்கி எனும் ஒரு மஞ்சள் நூல் கட்டுவது இந்த பண்டிகையின் சிறப்பாக மற்றும் முக்கிய நிகழ்வாகும். அந்த பெண்ணை சகோதரியாக ஏற்றுக் கொண்ட அந்த சகோதரன், சகோதரியின் பாதுகாப்பிற்கும். அவரின் வாழ்வில் மகிழ்ச்சி, நலனுக்காக உறுதுணையாக நிற்பேன் என்று உறுதி கூறுவதாகக் கூறப்படுகிறது.
இது பெரும்பாலும் இந்துக்களால் கொண்டாடப்படும் நாளாக இருந்தாலும். இது மதம், இனம், மொழித் தாண்டி சமூகத்தில் அனைவரும், அதைவிட உலகம் முழுவதும் கொண்டாட வேண்டிய பண்டிகையாகும். வட இந்தியாவில் பிரபலமான ரக்ஷா பந்தன், தற்போது தென் இந்தியாவிலும் பிரபலமாக வருகிறது.
ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு 2021 ஆகஸ்ட் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிழமை பெளர்ணமி வருவதால் அன்று கொண்டாடப்பட உள்ளது.
கலாச்சாரம் காட்டும் தினம்:
இந்தியாவின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், சகோதர – சகோதரி அன்பை, பாசத்தை வெளிப்படுத்தும் பல புராண கதைகள் நிறைந்த இந்த ரக்ஷா பந்தன் தினத்தை கொண்டாடுவது மிகவும் சிறப்பானது.
ரக்ஷா பந்தன் எப்படி கொண்டாட வேண்டும்!
ரக்ஷா பந்தன் தினத்தில் பெண்கள் குளித்து, புதிய ஆடைகளை அணிந்து, இறை வழிபாடு செய்து, சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி எனும் புனித கயிறை கட்டும் வரை சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.
தனது சகோதரனின் மணிக்கட்டில் ராக்கி கயிறு கட்டி நெற்றியில் சிகப்பு நிற திலகம் இட்டு, இனிப்பு வழங்குவார். அவர்களுக்கு ஆரத்தி எடுப்பார்கள். புனித கயிற்றை எற்று கொண்ட அந்த சகோதரன், தன் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக அதன் ஒரு பரிசுப் பொருளை வழங்குவார்.