யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தலைமையில் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சமையல் எரிவாயு, பால்மா மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினையுப் தட்டுப்பாட்டினையும் கண்டித்து சபை மண்டபத்தில் கவனயீர்ப்பு இடம்பெற்றது.
சமையல் எரிவாயு, பால்மா போன்றவற்றினையும் சபை உறுப்பினர்கள் சபைக்கு கொண்டு வந்திருந்த அதே வேளை பதாதைகளையும் சபை உறுப்பினர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
இன்றைய அமர்வின்போது நாடு முடக்கப்படுமானால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பிரதேச சபையின் சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான நிதியினை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்ற பிரேரணை ஒன்றும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, பிரேரணை ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த அமர்வின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர், தனிமைப்படுத்தல் காரணமாக சபை அமர்வில் பங்குபற்றாத உறுப்பினர்கள் சிலர் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், ஐக்கிய தேசிய கட்சி உறுப்பனர் மற்றும் ஈழ மக்கள் ஐன்னாயக கட்சி உறுப்பினர் இடையே கடும் விவாதம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

