டோக்கியோ: ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ என சொல்வதுண்டு. இது டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹன்ஸ்லே வாழ்வில் உண்மையாக உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் வெற்றிகரமாக முடிந்தது. இதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் தற்போது வெளிவருகின்றன. 110 மீ., தடை ஓட்டத்தில் பங்கேற்ற ஜமைக்கா வீரர் ஹன்ஸ்லே பார்ச்மென்ட் கதை பதட்டம் நிறைவடைந்தது. ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து தடகள போட்டி நடக்கும் இடத்திற்கு புறப்பட்டவர். தவறாக வேறு பஸ்சில் ஏறிவிட்டார். காதில் ‘ஹெட்போன்’ மாட்டியவாறு பாட்டு கேட்டுக் கொண்டே ஜாலியாக சென்றதால், எதையும் உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் தான், நீச்சல் போட்டி நடக்கும் இடத்திற்கு பஸ் செல்வதை உணர்ந்திருக்கிறார்.
ஓட்டம் தொடங்க சிறிது நேரமே இருந்ததால் ‘டென்ஷன்’ ஆனார். அவருக்கு கையும் ஒடலை, காலும் ஓடலை. திரும்ப ஒலிம்பிக் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து தடகள போட்டி நடக்கும் இடத்திற்கு செல்வது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை. குறித்த நேரத்தில் செல்ல தவறினால், நான்கு ஆண்டு உழைப்பு வீணாகிவிடும். கையில் பணமும் இல்லை. தவியாய் தவித்த நேரத்தில் தன்னார்வலரான பெண் ஒருவர் தெய்வம் போல வந்துள்ளார். டாக்சி பிடித்து செல்லும்படி கூறி, ஹன்ஸ்லேக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.
உடனே டாக்சியில் மின்னலாக புறப்பட்ட ஹன்ஸ்லே, சரியான நேரத்திற்கு தடகள அரங்கிற்கு சென்றார். பதட்டத்தை கடந்து, 110 மீ., தடை ஓட்டத்தில் (13.04 வினாடி) தங்கம் வென்றார்.
போட்டி முடிந்ததும், உண்மையான ஒலிம்பிக் சாம்பியனான ஹான்ஸ்லே தனக்கு உதவிய பெண்ணை தேடி பிடித்தார். அவரது பெயர் டிரிஜானா ஸ்டாஜ்கோவிக். கோடி நன்றி சொன்னார். உதவிக்கு கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்தார். தன் ஜெர்சியை பரிசாக அளித்தார். ‘ஜப்பான் மக்கள் இனிமையானவர்கள். உங்களுக்கு உதவியால் தங்கம் வென்றேன். உங்களுக்கு நன்றி, ‘என உணர்ச்சிபொங்க கூறினார்.
தனக்கு நேர்ந்த சம்பவத்தை ‘வீடியோ’வில் விவரித்து’ இன்ஸ்டாகிராம் ‘சமூகவலைதளத்தில் வெளியிட்டார் ஹன்ஸ்லே. இந்த வீடியோ இப்போது வைரலாக வருகிறது.
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்யும் உதவி, அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தைவிட பெரிதாக மதிப்பதால் என்பார் வள்ளுவர். இது போல டிரிஜானா செய்த உதவி, ஹன்ஸ்லே வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தக்க நேரத்தில் உதவிய டிரிஜானா, நன்றி மறக்காத ஹன்ஸ்லேக்கு பாராட்டு குவிகிறது. ஜமைக்கா சுற்றுலா துறை அமைச்சர் எட்மண்ட் பார்ட்லெட் கூறுகையில், ” எங்கள் நாட்டு வீரருக்கு அன்பு காட்டிய பெண்ணுக்கு, நாங்களும் உதவ விரும்புகிறோம். விடுமுறையை கொண்டாட ஜமைக்கா வருமாறு அழைக்கிறோம், ” என்றார்.