ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தான் நாட்டிற்குச் சென்று விட்டார். தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா இன்று வெளியிட்ட ஒரு வீடியோ கிளிப்பில் இதனை உறுதி செய்தார்.
அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் மக்களை குழப்பத்திலும் துன்பத்திலும் விட்டுவிட்டார், அவர் எதிர்காலத்தில் தீர்ப்பளிக்கப்படுவார்.என அப்துல்லா அப்துல்லா கூறினார்.
அஷ்ரப் கனி தலைமையிலான ஆப்கான் அரச நிர்வாகத்தை தலிபான்களிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுக்களை, தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா மத்தியஸ்தம் வகித்திருந்தார்.
ஆட்சியதிகாரத்தை சுமுகமாக தலிபான்களிடம் கைமாற்றி விட்டு செல்ல இணக்கம் தெரிவித்து விட்டே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி அஷ்ரப் கனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா முஹிப், ஜனாதிபதி அலுவலக பிரதானி ஃபேசல் மஹ்மூத் ஃபாஸ்லி ஆகியோர் ஆப்கானை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானிற்கு சென்றுள்ளனர்.
முன்னதாக, ஆப்கான் பாராளுமன்ற சபாநாயகர் மிர் ரஹ்மான் ரஹ்மானி உள்ளிட்ட பல பிரமுகர்கள் பாகிஸ்தானிற்கு தப்பிச் சென்றனர்.
அதிகார மாற்றம் சுமுகமாக இடம்பெறும் என்ற நம்பிக்கையில் தலைநகர் காபூலிற்கு வெளியே காத்திருந்த தலிபான்கள், ஆட்சியாளர்கள் வெளியேறியதையடுத்து, தலைநகரிற்குள் நுழைய ஆரம்பித்துள்ளனர்.
தலிபான்களின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், காபூல் நகரத்திற்குள் நுழையுமாறு தமது ஆயுததாரிகளை அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நகரத்தில் கொள்ளை மற்றும் குழப்பத்தை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் படைகள் காபூல் நகரத்தில் உள்ள புறக்காவல் நிலையங்களை விட்டு வெளியேறியதால், கொள்ளைகள் இடம்பெறும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரம் இன்னும் மாற்றப்படாத நேரத்தில் காபூல் போராளிகளால் முழுமையாக கைப்பற்றப்பட்டுள்ளது. அதிகார கைமாற்றல் தொடர்பான பேச்சுக்கள் தொடர்ந்த நடந்து வரும் நிலையில், இந்த செயல்முறையை இறுதி செய்ய தலிபான் பிரதிநிதிகள் தோஹாவிற்கு புறப்படவுள்ளனர்.




