ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை அமைதியான முறையில் தலிபான்களிடம் ஒப்படைப்பதற்கான பேச்சுக்கள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஜனாதிபதி மாளிகையின் அதிகாரம் தலிபான்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும், விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகுமென்றும் தெரிகிறது.
தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் தலைவர் அப்துல்லா அப்துல்லா இந்த செயல்முறைக்கு மத்தியஸ்தம் செய்வதாக கூறப்படுகிறது.
புதிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக அலி அஹமத் ஜலாலி நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆப்கானின் பதில் உள்துறை மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் வெளியிட்ட இரண்டு தனித்தனி வீடியோ செய்திகளில், சர்வதேச கூட்டாளிகளுடன் சேர்ந்து நகரத்தைப் பாதுகாப்பதால் காபூல் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் இராணுவரீதியாக நுழைய விரும்பவில்லை, காபூலை நோக்கி அமைதியாக நுழைவோம், யாரையும், பழிவாங்க மாட்டோம், அரச அதிகாரிகளிற்கும் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்பதால் காபூலில் வசிப்பவர்கள்பயப்பட வேண்டாம் என்று உறுதியளித்தனர்.