நாம் இன்றைக்கு கொரோனாவை எதிர்த்து கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிற நேரமிது. சாதாரணமாக கை, கால், முகம் கழுவாமல் இருப்பதிலிருந்தும், நோய் தாக்கிய பிறரிடம் இருந்தும் தான் தொடங்குகிறது இத்தொற்று. இஸ்லாமிய மார்க்கத்தில் ஐந்து வேளை தொழுவது கட்டாயக் கடமை. அந்தத் தொழுகையை நிறைவேற்றும் முன்பு கை, கால், முகங்களை கழுவி விட்டுத் தான் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது மார்க்க விதி.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்னர்) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரையில் உங்கள் இரு பாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்” என்று திருக்குர்ஆன் (5:6) வலியுறுத்துகிறது. இன்றைக்கு நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நமது கவனமின்மை தான் முதல் காரணம்.
“மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதின் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன”. (திருக்குர்ஆன் 30:41) “எந்த ஒரு தீங்கும் உங்களை வந்தடைவதெல்லாம், உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாகத் தான்”. (திருக்குர்ஆன் 42:30) இந்த இரு வசனங்களும் நம்மைச்சுற்றி நிகழ்கிற பிரச்சினைகளுக்கு நாம் தான் முதல் காரணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இஸ்லாமிய மார்க்கம் எதை ‘ஹலால்’ (இது இறைவனால் அனுமதிக்கப்பட்டது) என்று வரையறுத்திக் கூறியிருக்கிறதோ, அவைகளைத் தான் நாம் உண்ணவும், குடிக்கவும் வேண்டும். நாம் நமது உடலுக்குள் செல்லும் உணவில் கவனமாக இருப்பதைப் போல் நமது உடலின் மேல் படிந்திருந்திருக்கும் உடைகள் தூய்மையாக இருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அசுத்தங்கள் தங்கும் இடங்களில் ஒன்றாக உடைகளும் இருக்கின்றன. ஆகவே, உடல், உடை, உணவு, உள்ளம் என இந்த நான்கையும் நாம் நன்கு முழு கவனத்துடன் பராமரித்துக் கொண்டாலே போதும், நிச்சயம் நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதுமட்டுமல்ல, கூடவே சக மனிதர்களுடன் இணைந்து, இசைந்து வாழ்வதும் தான் இஸ்லாம் வலியுறுத்தும் இனிய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நாம் யாருக்கும் அணுவளவும் இடையூறுகள், தொந்தரவுகள் தரக்கூடாது என்பது முக்கியம்.
நபித்தோழர் ஒருவர் தமது ஒட்டகத்தை கட்டிவைக்காமலேயே மசூதிக்குள் வந்தபோது, ‘ஏன் கட்டிவைக்கவில்லை?’ என்று கேட்ட போது ‘நான் இறைவனின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்’ என்று வந்தவர் சொன்னபோது, “முதலில் ஒட்டகத்தை கட்டிப் போடு, பிறகு நீ இறைவனின் மீது நம்பிக்கை வை” என்று கண்டித்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.