ஜாதகத்தில் சில கிரகங்களின் நிலை சரியில்லாமல் இருப்பதாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும் நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றது. அப்படியான ஒரு தோஷம் தான் நாக தோஷம். ஒருவருக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் நாக தோஷத்திற்கான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் இங்கு பார்ப்போம்.
ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது. மேலும் பாம்பு புற்றுகளை இடிப்பதாலும், நாக பாம்புகளை கொல்வதாலும் நாக தோஷம் உண்டாகிறது. இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன் மனைவி பிரிதல், குழந்தை பாக்கியம் இல்லாதிருத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் வியாபாரங்களில் நஷ்டம், திடீர் விபத்துகள் போன்ற துர்பலன்கள் ஏற்படக்கூடும்.
இந்த நாக தோஷம் கொண்ட நபர்கள். தினந்தோறும் காலையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வள்ளி, தெய்வானை உடன் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்தின் கடுமைத்தன்மையை குறைக்கும்.
செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு வருவதும் சிறந்தது. பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று புற்றில் பாலூற்றி வழிபட்டு, அக்கோவிலிலிருக்கும் ராகு-கேது விக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.
வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தில் கோமேதக ரத்தினத்தை பதித்து வலது கையின் நடுவிரலில் அணிந்து கொள்வதால் நாக தோஷம் கொண்டவர்களுக்கு தீய தோஷம் ஏற்படாமல் தடுக்கும். அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பருப்பு வகையை தானமாக நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் ஆகும்.