பண்டைய காலம் முதல் பாதங்களில் செய்யப்படும் மசாச்சிற்கு ஆயுர்வேதம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பாதத்தில் சரியான முறையில் மசாச் செய்வதன் மூலம் நரம்புகள் தூண்டப்படும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். இரத்த ஓட்டமும் மேம்படும். தசைகளும் நெகிழும். பதற்றம் குறையும். உடல் வலியும் நீங்கும். பாதங்களில் சரியான புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாச் செய்யும்போது இதயம், நுரையீரல் பலப்படும். கழுத்து வலி, சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பாத மசாச் மூலம் கிடைக்கும் முக்கியமான 6 நன்மைகள்:
1. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்: பாதங்களில் மசாச் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டிவிடும். குறிப்பாக பாதத்தின் நுனி பகுதியில் மசாச் செய்யும்போது உடல் புத்துணர்ச்சியை உணரும். தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரும். பதற்றம், மன அழுத்தம் குறையும்.
2. மனநலம்: மாதவிடாய் நாட்களில் பெண்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதால், மனநலனிலும் ஓரளவு நெருக்கடி தோன்றும். பாதத்தின் கட்டை விரலை அழுத்தி மசாச் செய்தால் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மனநலம் மேம்படும்.
3. கர்ப்பகாலம்: பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் வீக்கம், வலி போன்றவை களால் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் பாத மசாச் செய்யும்போது வளர்சிதை மாற்ற செயல்பாடு மேம்படும். அதனால் வீக்கம், வலி குறையும்.
4. உற்சாகம்: சோம்பல், தசை பலவீனம், உற்சாகமின்மையால் அவதிப்படுகிறவர்கள் பாத மசாச் செய்தால் உற்சாகத்துடன் செயல்படலாம்.
5. தலைவலி: கழுத்து மற்றும் தோள்களில் ஏற்படும் வலி, தலையின் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் ஏற்படும் வலிகளை போக்கவும் பாத மசாச் துணைபுரியும். கால் விரல்களின் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் அழுத்தம் கொடுத்து மசாச் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.
6. புத்துணர்ச்சி: கால்களில் எண்ணற்ற நரம்பு முடிச்சுகள் உள்ளன. அவை முதுகுத்தண்டுவடத்துடன் தொடர்புடையவை. வட்ட இயக்கத்தில் விரல்களை அழுத்தி தேய்த்து 30-45 விநாடிகள் பாதத்தில் மசாச் செய்தால், முதுகு தண்டுவடத்தில் புத்துணர்ச்சி பரவும்.