ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் முன்னேற்றம் மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில், தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையத்தின் பாதுகாப்பை துருக்கியிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுகிறது.
இந்த திட்டத்திற்குதலிபான்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், விமான நிலையத்தை இயக்கவும் பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையம் திறந்த நிலையில் இருப்பது மிகவும் முக்கியம் என்று துருக்கி நம்புகிறது.
செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறுவதால், காபூல் விமான நிலையத்தை பாதுகாக்க உதவுமாறு நேட்டோவின் உறுப்பு நாடாக துருக்கி கோரப்பட்டிருந்தது.
விமானநிலையத்தில் தற்போது கிட்டத்தட்ட 650 அமெரிக்க படையினர் கடமையிலுள்ளனர். அவர்கள் விமான நிலையத்தை பாதுகாத்து வருகின்றனர். விரைவில் விமான நிலையத்தை துருக்கிய துருப்புக்களிடம் ஒப்படைத்த பிறகு நாட்டை விட்டு வெளியேறுவார்கள்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள துருக்கிய தூதரகத்தில் பேசிய துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹுலூசி அகார், காபூல் விமான நிலையத்தை பாதுகாப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அநேகமாக இது வரும் நாட்களில் இடம்பெறும் என்றார்.
துருக்கி வெளிப்படையாக காபூலுக்கு படைகளை அனுப்ப தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலைமையை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அமைதி செயல்முறையை பாதுகாக்க தலிபான் தலைவர்களுடன் பேச தயாராக இருப்பதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் புதன்கிழமை கூறியுள்ளார்.
எனினும், காபூல் விமான நிலையத்தில் துருக்கியப் படையினர் நிறுத்தப்படுவது ஆக்கிரமிப்பின் தொடர்ச்சியாகக் கருதப்படும் என்று தலிபான் முன்பு எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.