30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

சந்தேகத்தால் சீரழிந்த இலங்கை காதல் ஜோடியின் லண்டன் காதல்: காதலியை காரால் மோதிய காதலனிற்கு 11 வருட சிறை!

பிரித்தானியாவில் தனது காதலியை காரால் மோதி படுகாயப்படுத்திய இலங்கை மாணவனிற்கு 11 வருடங்களும் 8 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காதலியும் இலங்கையை சேர்ந்தவர்தான்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் திகதி பக்கிங்ஹாம்ஷேர், லோஹ்வுட் லேனில் இடம்பெற்ற இந்தச்சம்பவத்தில், அப்போது 18 வயதான டினா சப்ராவின் மீது, அப்போது 19 வயதான லக்ஷமன் சமரக்கோன் காரினால் மோதி பலத்த காயமடைய வைத்தார்.

ஹரோ, ஹில் வீதியை சேர்ந்த லக்ஷ்மன் சமரக்கோனிற்கு இந்த வார தொடக்கத்தில் அய்ல்ஸ்பரி கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இப்போது 19 வயதான டினா சப்ரா நீச்சல், வலைப்பந்து மற்றும் டென்னிஸ் வீராங்கனை. இலங்கையில் நடந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் 4 A சித்தி பெற்றார். விபத்தை தொடர்ந்து, கல்வியை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது. விளையாட்டுக்களில் ஈடுபட முடியாமல் போனது.

2018 இல் சப்ரா தனது குடும்பத்துடன் துபாய்க்கு விடுமுறைக்குச் சென்றிருந்தார். அப்போது, சப்ரா மற்றவர்களுடன் பழகும் படங்களைப் பார்த்து கோபமடைந்த சமரக்கோன், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர் காதலின் நகர்வுகளை Snapchat செயலியில் கண்காணிக்க ஆரம்பித்துள்ளார். சப்ராவின் ஆண் நண்பர்களின் குறுஞ்செய்திகளை கண்காணிக்க ஆரம்பித்ததுடன், சப்ராவின் ஆண் நண்பர்கள் தொடர்புகளை தடுக்கவும் ஆரம்பித்தார்.

“சப்ரா மீது குறைந்த நம்பிக்கையெ கொண்டிருந்தார். புகைப்படங்களைப் பார்க்கவும், அவளுடைய தொலைபேசியைச் சரிபார்க்கவும், சில சமயங்களில் சமூக ஊடகங்களில் அவள் தொடர்பு கொண்ட சிறுவர்களிடமிருந்து தொடர்பைத் தடுக்கவும் விரும்பினார்.” என சப்ரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சந்தேகம் உச்சமடைந்து விபரீதமானது 2020 ஜூலை 12 நள்ளிரவுக்குப் பின்னைய பொழுதில்.

இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரின் 18வது பிறந்தநாளுக்காக அமர்ஷாமில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தனர்.

அந்த சமயத்தில் 18 வயதாகும் சப்ரா முதலில் வந்திருந்தார். சற்று தாமதமாக, அப்போது 19 வயதான சமரக்கோன் விருந்துக்கு வந்தார். தனது பெற்றோரின் வாக்ஸ்ஹால் அஸ்ட்ரா வாகனத்தில் வந்திருந்தார்.

அப்போது, சப்ராவுக்கு ஆண் நண்பர் ஒருவரிடமிருந்து குறுந்தகவல் வந்தது. ஏற்கனவே சந்தேகம், பொறாமை என வெந்து கொண்டிருந்த லக்ஷ்மன், கோபமடைந்தார். சப்ரா தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டினார். பின்னர், சப்ராவின் தொலைபேசியை பறிந்துகொண்டு வெளியில் நின்ற தனது காருக்கு சென்று, சாரதி இருக்கையில் அமர்ந்துள்ளார்.

தனது தொலைபேசியை தருமாறு கேட்டபடி சப்ரா பின்னாலேயே சென்றுள்ளார்.

அப்போது நடந்த சம்பவத்தின் சிசிரிவி காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சப்ராவை நோக்கி சமரக்கோன் காரை பின்பக்கமாக செலுத்தினார். சுதாகரித்துக் கொண்ட சப்ரா, நடைபாதைக்கு பாய்ந்தார்.

நடைபாதையில் ஓடிச்சென்ற சப்ராவை நோக்கி காரை திருப்பி, விரட்டி சென்றுள்ளார். பின்னர் நடைபாதையில் காரை ஏற்றி சப்ராவை மோதி தள்ளினார். சப்ரா கீழே விழும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சப்ராவை விரட்டிச் சென்ற போது, கார் 17mph க்கும் குறைவான வேகத்தில் சென்றதை நிபுணர்கள் பகுப்பாய்வில் உறுதி செய்தனர்.

சப்ராவை மோதி தள்ளியதும், காரில் இருந்து இறக்கிய சமரக்கோன் 999 இலக்கத்தை அழைத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். பின்னர் சப்ராவிற்கு முதலுதவி அளிக்க முயன்றுள்ளார்.

நீதிமன்ற விசாரணையில், 999 இலக்கத்திற்கு சமரக்கோன் வழங்கிய சுவாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது. “நான் ஒரு பயங்கரமான தவறு செய்து விட்டேன். என்னை வந்து கைது செய்யுங்கள்“ என்றே தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சப்ராவை ஜோன் ரொட்கிளிஃப் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதுடன், சமரக்கோனை கைது செய்தனர்.

சமரக்கோன் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி லிசா வில்சன், சமரக்கோன், சப்ராவிற்கு உண்மையான மரியாதை காண்பித்தார். விபத்துக்குப் பிறகு உடனடியாக பாதிக்கப்பட்டவரை “மதிக்கிறார்” என்று வாதிட முயன்றார்.

காரால் மோதப்பட்டதை தொடர்ந்து, சப்ராவிற்கு முதலுதவி அளிக்க முயன்றார். ஆனால் தன்னிடமிருந்து விலகி இருக்குமாறு சப்ரா சொன்னபோது “அவளுடைய விருப்பத்தை மதித்தார்” என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

சட்டத்தரணி வில்சன்: “இது (கார்) ஒரு துப்பாக்கி அல்ல, அது அவசியமாக தீங்கு விளைவிக்கும் ஒரு பொருள் அல்ல, துப்பாக்கி போன்ற தீவிர ஆயுதங்கள் இருக்கும் விதத்தில் அது ஒரு ஆயுதமாக பயன்படுத்த அங்கு கொண்டு வரப்படவில்லை.

அவர் நேர்மறையான நல்ல குணத்தைக் கொண்டுள்ளார். அவர் ஒரு இளைஞர், அவர் சமுதாயத்திற்கு நிறைய நன்மைகளைச் செய்யக்கூடிய ஆற்றலைக் கொண்டிருந்தார்

அவர் அவளுக்கு உண்மையான மரியாதை காட்டினார். அவர் அவளுக்கு முதலுதவி உதவ விரும்பினார், ஆனால் அவர் விலகி இருக்க விரும்பினார் என்றார்.

எனினும், நீதிபதி பிரான்சிஸ் ஷெரிடன் அந்த வாதங்களை நிராகரித்து, சமரக்கோனுக்கு தண்டனை வழங்கினார். சமரக்கோனின் நடத்தையை “பொல்லாதவர்” என்று அழைத்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில்: “இது ஒரு அன்பான பெண் மீது பொறாமையால் தூண்டப்பட்ட குற்றம். அவளுடைய சொந்த வாழ்க்கையில் அவள் என்ன செய்யலாமென்பதை இறுதியாகக் கூற நீங்கள் தகுதியானவர் என்று நீங்கள் நம்பினீர்கள். ஆனால் அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

சப்ராவை மோதிய பிறகு, உணர்வு தணிந்ததும், அவளுக்கு உம்மால் முடிந்த உதவியை செய்ய முயற்சி செய்தபோது, ​​நீர் தன்னை தொடுவதை சப்ரா விரும்பவில்லை. அவளை யார் குற்றம் சொல்ல முடியும்?

இது ஒரு கத்தி அல்ல, ஒரு துப்பாக்கி அல்ல, ஆனால் நீங்கள் வேண்டுமென்றே ஒருவரை மோதி விழுத்தும்போது, அதே சேதம் தான் ஏற்படும்.

நீங்கள் வேண்டுமென்றே ஒருவரை இடித்து வீழ்த்தினால், ஒருவரின் வாழ்க்கை வாய்ப்புகளை மெதுவான வேகத்தில் கூட அழிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.” என்றார்.

உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றத்திற்காக சமரக்கோனுக்கு 11 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, நீதிபதி ஷெரிடன் தீர்ப்பளித்தார்.

அவர் எட்டு ஆண்டு ஓட்டுநர் தடையும் பெற்றார். அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது அந்த தடை நடைமுறைக்கு வரும்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் பலத்த காயமேற்படுத்திய குற்றத்தை சமரகோன் ஒப்புக்கொண்டார். அபாயகரமான ஓட்டுநர் குற்றச்சாட்டுக்காக அவருக்கு தனி அபராதம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே வழங்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் இணைந்ததாக அதை அனுபவிக்கலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

Leave a Comment