மது அருந்துகின்றவர்களில் நிறையப் பேருக்கு அது உடலுக்குள் எங்கெங்கு செல்கிறது, என்னென்ன செய்கிறது, எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதெல்லாம் தெரியாது. அதை தெரிந்து கொண்டால் மது அருந்துவதை நிறுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, அதை தெரிந்துகொள்ளவும் பலர் விரும்புவதில்லை.
ஒருவர் அருந்தும் மது முதலில் இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்திடும் நிலையில், மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறு குடலுக்கு ரத்தம் ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஈரலுக்கு வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறும். அப்போது அதன் செயல்பாடு சீரில்லாமல் போகும். காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.
சிலர் விலை உயர்ந்த பிராண்ட் மதுவை அருந்துவதாக கூறி, தங்களை ஆறுதல்படுத்திக்கொள்கிறார்கள். விலை உயர்ந்தது அனைத்தும் தரம் உயர்ந்தது என்றோ, ஆபத்து குறைந்தது என்றோ கருதிவிட முடியாது. எவ்வளவு விலை உயர்ந்த மதுவை குடித்தாலும் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும். மதுவில் நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. எல்லாம் ஒன்றுதான். மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் ஒட்டுமொத்தமாக அது உடலைக் கெடுக்கத்தான் செய்யும்.
மது ரத்தத்தில் கலக்கும்போது முதலில் உணர்வு நரம்புகளைத்தான் பாதிக்கும். அதனால் காலப்போக்கில் போதையை உணர முடியாத அளவுக்கு நரம்புகள் மரத்துப்போகும். அதனால்தான் பலரும் போதையின் தன்மை தெரியாமல் தடுமாறி, உளறிக்கொட்டுகிறார்கள். உடலின் உள்ளே செல்லும் மது, உடலில் பெரும்பகுதிகளை பாதிக்கும். மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாசத்தடை நோய்களும் அவர்களை தாக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றலும் குறைந்து கொண்டேபோகும். மது பாலியல் ஆர்வத்தை கட்டுப்படுத்திவிடும். இன்பத்தை உணரும் தன்மையும் குறைந்துபோகும். மது அருந்தும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நரம்பு மண்டல கட்டமைப்புகளும் சீர்குலையும். அப்போது இதயத்துடிப்பு அதிகமாகி, ரத்த அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும். சர்க்கரை நோய் இருந்தால் அதுவும் கூடிவிடும்.
மது அருந்துகிறவர்கள் விரைவாக மன அழுத்தத்திற்கும் உள்ளாகுவார்கள். காலப்போக்கில் மதுப்பழக்கம் அவர்களை மனநலக்கோளாறு கொண்டவர்களாகவும் ஆக்கிவிடும். ஏன்என்றால், மதுவின் போதையில் அவர்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாதவர்களாகிவிடுகிறார்கள். ஆல்கஹால் பொதுவாகவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், தொடர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தால் மனநலம் சீர்குலையும். மது அருந்துபவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுவார்கள். வேலையிலும் அவர்களால் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாது.
மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு ‘சர்வே’க்கள் தெரிவிக்கின்றன. இது, குழந்தையின்மை சிக்கல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருந்துகொண்டிருக்கிறது. மது அருந்தும் ஆண்களின் ஈரல் பாதிக்கப்படுவதுபோன்று, மது அருந்தும் பெண்களின் ஈரலும் பாதிக்கப்படும். அதனால் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் பெண்களிடம், ஆண் ஹார்மோன் அதிகம் சுரந்து, பெண் தன்மை குறையும். பெண்களின் உடலில் ஆண்தன்மை அதிகரிப்பது அவர்களது இனப்பெருக்கத்திறனை குறைத்துவிடும்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக புறக்கணித்துவிட வேண்டும். ஏன்என்றால் தாய் அருந்தும் மதுவின் தாக்கம் குழந்தையின் இயல்பிலும், தோற்றத்திலும், செயல்பாட்டிலும், ஆரோக்கியத்திலும் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கர்ப்பமாக இருக்கும் பெண் மது அருந்துவது, அவளது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகமாகிவிடும். மது அருந்துவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கமும் தாய்க்கு இருந்தால் பிறக்கும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.