ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன்படி, தொற்று விகிதங்களைக் குறைக்கவும், ஒட்சிசனைச் சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார அமைச்சின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவின் தலைவர் வைத்தியர் ஹேமந்த ஹேரத், டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நபர்களின் உண்மையான எண்ணிக்கை, அறிக்கையிடப்பட்ட புள்ளிவிவரங்களை விட மிக அதிகம் என்றார்.
கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பதிவாகும் நோய்த்தொற்றுகளில் சுமார் 20-30 சதவிகிதம் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களே என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,052 பிசிஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய அறிக்கைகளின் படி தீவிர சிகிச்சை பிரிவில் 81 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
கோவிட் தொற்றுநோய் தொடர்பான ஒரு முக்கியமான சூழ்நிலையை நாடு அடைந்திருக்கிறதா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை புறக்கணிப்பதன் மோசமான விளைவுகளை பற்றி ஒரு வாரத்திற்கு முன்பு எச்சரித்ததாக கூறினார்.