2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் 200 மீட்டர் பந்தயத்தில் ஜமைக்காவின் எலைன் தொம்சன் தங்கம் வென்றார். மகளிர் தடகள உலகின் எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கணைகளில் ஒருவராக தனது பெயரை பொறித்துள்ளார். ஏனெனில், வரலாற்றில் 100m, 200m பந்தயங்களில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதலாவது வீராங்கனை அவர்தான்.
21.53 செக்கனில் பந்தயத் தூரத்தை கடந்தார். இது ஜமைக்காவின் தேசிய சாதனையாகும். ஒலிம்பிக் மகளிர் 200 m பந்தயத்தில் இரண்டாவது அதிவிரைவு நேரமாகும்.
நமீபியாவின் 18 வயதான கிறிஸ்டின் எம்போமா 21.81 விநாடிகளில் பந்தயத்தை முடித்து வெள்ளி வென்றார். அமெரிக்காவின் கேபி தாமஸ் 21.87 செக்கனில் வெண்கலம் பெற்றார்.
எலைன் தொம்சன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெறும் 2வது தங்கம் இது. அவரது தொழில் வாழ்க்கையின் நான்காவது தங்கம் ஆகும். அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டர்களை வென்ற வரலாற்றில் முதல் பெண் ஆனார்.
2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 100 மற்றும் 200 மீட்டரில் தங்கம் வென்றார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இரண்டு போட்டிகளிலும் மீண்டும் தங்கம் வென்றுள்ளார்.
29 வயதான அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக காயத்துடன் போராடியமை குறிப்பிடத்தக்கது.