கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆவா குழுவின் இரகசிய குறியீட்டுடனான கேக்கை, வாளால் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் தென்மராட்சி, கொடிகாமம் மற்றும் அதை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொது இடமொன்றில் இளைஞர்கள் குழுவொன்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்றனர்.
இதன்போது, சுமார் 5 அடி நீளமாக கேக்கை வாளால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.
கேக் வெட்டும் நிகழ்வின் பின்னணியில் கட்டியிலிருந்த கருப்பு துணியில்கே.ரி.எஸ். கெமி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் குருநகரில் இதே பெயரில் வாள்வெட்டுக்குழு ஒன்று இயங்கி வருவதால், பொலிசார் எச்சரிக்கையாகி இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கேக்கிலும், பின்னணி துணியிலும் பொறிக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரின் ஆங்கில முதல் எழுத்துக்கள் என இளைஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவிலிருந்த ஒருவரின் பிறந்தநாள் என்றும், யாழ்ப்பாணத்திலிருந்த சென்று தற்போது மலேசியாவில் தங்கியுள்ள ஒருவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பணம் அனுப்பியதாகவும், அந்த பணத்தில் “ஒரு ஆத்தல்“ எடுக்க வந்த இடத்தில் மாட்டி விட்டோம் என இளைஞர்கள் தரப்பில் கதறியுள்ளனர்.
எனினும், அவர்கள் வாள்வெட்டு குழுவுடன் தொடர்பு கொண்டிருக்கலாமென பொலிசார் நம்புகிறார்கள்.
பிறந்தநாள் கேக்கிலும், பின்னணி துணியிலும் 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கத்திற்கு இளைஞர்கள் தரப்பில் முறைான விளக்கமளிக்க முடியவில்லை. அந்த இலக்கம் ஆவா குழுவின் குறியீட்டு இலக்கம்.
அவர்கள் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.