புலம்பும் ‘மாநாடு’ பட இயக்குனர் வெங்கட் பிரபு!
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்திற்கு பிறகு நீண்ட காலமாக படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் மாநாடு படத்தின் போஸ்ட் புரொடேக்ஷன் பணிகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளுக்கு பதிலளித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.
மாநாடு படத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் மாநாடு திரைப்படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்நிலையில் மாநாடு படத்தின் போஸ்ட் புரொடேக்ஷன் பணிகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாகவும், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் இணையத்தில் சிலர் வதந்திகள் பரப்பி வந்தனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார்.
அவர் தன்னுடைய பதிவில், ‘எப்பா சாமி, ஏன் இப்படி? தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள். ‘மாநாடு’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிம்மதியா எங்களை வேலை செய்ய விடுங்கள்’ என மாநாடு படத்தின் நெட்டிசனின் பதிவு ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. மாநாடு படத்தினை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.