யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் பெரும் குளறுபடி இடம்பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
அரசியல் தலையீட்டினால் தயாரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பட்டியலை சீர் செய்ததில், கிட்டத்தட்ட 187 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 180 பேர் வரையில் அரசியல் தரப்பினரால் உள்நுழைக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, பிரதமரினால் நியமிக்கப்பட்ட இணைப்பாளரின் அதிரடி நடவடிக்கையையடுத்தே இந்த முறைகேடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் இணைப்பாளரின் தலையீட்டையடுத்து, பயனாளிகளின் பட்டியலை மீள காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில் அரசியல் தலையீட்டினால் உள்நுழைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் நீக்கப்பட்டு, புதிய பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமிய வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கட்டடப் பொருள்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சால் யாழ்ப்பாண மாவட்டத்தில் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 10 இலட்சம் மற்றும் 6 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு வகையான வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவற்றுக்குரிய பயனாளிகள் தெரிவு மார்ச் மாதம் இடம்பெற்றது. ஏப்ரல் மாதம் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அதற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியல் பிரதேச செயலர்களின் ஒப்பத்துடன் ஏப்ரல் மாத இறுதியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரதேச செயலர்கள் ஒவ்வொருவராலும் அனுப்பி வைக்கப்பட்ட பயனாளிகள் பட்டியல், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கு மாவட்டச் செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, யாழ்ப்பாண வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அங்கஜன் இராமநாதன் தரப்பினரால் அதீத தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பியது. அந்த தரப்பின் அமைப்பாளர்கள் என கூறிக்கொண்டு அரச அதிகாரிகளிற்கு அழுத்தம் கொடுப்பது, பயனாளிகள் பட்டியலில் இணைக்கக் கோருவதென பெரும் அலப்பறை செய்து வந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
புலனாய்வு சேவைகளும் இது குறித்து பல தகவல்களை ஜனாதிபதி, பிரதமருக்கு அறிக்கையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அமைச்சரவை அங்கீகாரம் மூலம் வடக்கு கிழக்கு வீட்டுத் திட்ட இணைப்பாளராக, பிரதமரின் இணைப்பாளராக செயற்பட்ட கீதநாத் நியமிக்கப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளை மதிப்பிட்டு, சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு சென்று மதிப்பீடு செய்ததில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் அலசியதில், உயரதிகாரிகள் பலர், அழுத்தத்தினால் அப்படி செயற்பட்டு விட்டோம் என “சரண்டர்“ ஆகியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, புள்ளி திட்டத்தின் கீழ் பயனாளிகள் பட்டியலை தயாரித்து, பிரதேச செயலகங்கள், கிராம சேவகர், பொருளாதார உத்தியோகத்தர் அலுவலகங்களில் காட்சிப்படுத்துமாறு, மாவட்ட அரசாங்க அதிபர் அவசர அறிவித்தல் ஒன்றை, கடந்த 3ஆம் திகதி சகல பிரதேச செயலகங்களிற்கும் அனுப்பினார்.
இதற்கு அமைவாக பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர் அலுவலகங்களில் பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னர், இணைத்தலைவர்களின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலிலிருந்து 187 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னர் இறுதிப்பட்டியல் என குறிப்பிட்டு ஒருங்கிணைப்புக் குழு தலைவருக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 187 பேரின், தற்போது நீக்கப்பட்ட பட்டியலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சாவகச்சேரி, கோப்பாய், சங்கானை, உடுவில், பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே மோசமான தலையீடு நிகழ்ந்துள்ளதாக, பட்டியல்களிற்கிடையிலான புள்ளிவிபர ஆதாரம் குறப்பிடுகிறது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதேச செயலாளர்கள் தமது பகுதியில் அரசியல் தலையீட்டிற்கு அனுமதிக்கவில்லை.
ஏனைய சில பிரதேச செயலாளர்கள் பிரிவில் சிறிய எண்ணிக்கையில் வித்தியாசம் காணப்பட்டது. அப்படியானவற்றில் பெரும்பாலானவற்றில் பகுதிகளில், பிரதேச செயலாளர்களே அறியாமல் சம்மந்தப்பட்ட வேறு உத்தியோகத்தர்கள் மூலம் தலையீடு நிகழ்ந்திருக்கலாமென கருதப்பட்டு, அது பற்றிய விசாரணைகள் நடந்து வருகிறது.