கேரளாவைச் சேர்ந்த பெண் பழநிக்கு வந்தபோது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கடத்தல் மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் பிரிவுகளில் போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியா தெரிவித்தார்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலைச்சேரியைச் சேர்ந்த பெண் தங்கம்மாள் (45). இவர், உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் உடல்நிலை குறித்து சந்தேகமடைந்து விசாரிக்க, கடந்த ஜூன் மாதம் 19-ம் தேதி கணவருடன் திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலுக்குச் சென்றதாகவும் அங்கு கணவரைத் தாக்கிவிட்டு மூன்று பேர் தன்னைக் கடத்திச் சென்று விடுதியில் தங்கவைத்து, பலாத்காரம் செய்ததால் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கண்ணனூர் போலீஸாரிடம் புகார் செய்தனர். பிற மாநிலத்தில் ஏற்பட்ட நிகழ்வு என்பதால் கேரள மாநில டிஜிபிக்கு கண்ணனூர் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள டிஜிபி அணில்காந்த், தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு பாதிக்கப்பட்ட கேரளப் பெண்ணின் புகாரில் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து விசாரிக்க திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியாவிற்கு டிஜிபி உத்தரவிட்டார். கேரளப் பெண் பழநியில் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து விசாரிக்க ஏ.டி.எஸ்.பி., சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையில் தங்கம்மாள் (45) என்ற கேரளப் பெண், தன்னைவிட வயது குறைந்த தர்மராஜ் (35) என்பவருடன் ஜூன் 19-ம் தேதி கேரளாவில் இருந்து ரயில் மூலம் பழநி வந்ததும், இரண்டு தினங்கள் பழநி அடிவாரத்தில் உள்ள விடுதியில் தங்கியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விடுதியில் அறை எடுத்தபோது இருவரும் தாய், மகன் எனக் கூறி அறை எடுத்ததாகவும், இரண்டு தினங்கள் தங்கிவிட்டுப் பின்னர் சென்று விட்டதாகவும், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டதாகவும், தங்கள் விடுதியில் இருந்து அவர்கள் புறப்படும்வரை எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என விடுதியில் பணியாற்றுபவர்கள் போலீஸார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ரவளிபிரியா பழநிக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ”கேரளப் பெண் பழநிக்கு வருகை தந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் 365 மற்றும் 376 டி எனக் கடத்தல் மற்றும் கூட்டு வன்கொடுமைச் சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள், அலைபேசி உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது நேரடிக் கண்காணிப்பில் இந்தக் குழுக்கள் செயல்படும். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமாகவும், நேர்மையாகவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான வழக்கில் கேரள போலீஸாருடன் இணைந்து முழு விசாரணை செய்வோம்” என்று ரவளிபிரியா தெரிவித்தார்.