உத்தர பிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு புதிய வரைவு திட்டத்தை வெளியிட்டிருக்கிறது . அதன்படி உ.பி மக்கள்தொகை மசோதா குறித்து மாநில சட்ட கமிஷன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்கலாம் எனவும், இதற்கு கடைசி தேதி ஜூலை 19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரைவு மசோதாவில் குறிப்பிட்டுள்ளதாவது, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற பெற்றோர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு குழந்தை பெற்றுக் கொண்ட ஒருவருக்கு அவருடைய பணிக்காலத்தில் கூடுதலாக இரண்டு இன்கிரிமெண்ட் வழங்கப்படும் அல்லது பேறுகால விடுமுறை 12 மாதம் முழு சம்பளத்துடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மகப்பேறு மையங்கள் அமைக்கப்பட்டு கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டு குடும்ப கட்டுப்பாட்டு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை பிறப்பு இறப்பு ஆகியவற்றை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.