மன்னார் ஆடை தொழிற்சாலையில் இருந்து அங்கு கடமையாற்றும் பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பஸ் சாரதி கடுமையான மது போதையில் குறித்த பஸ்ஸினை செலுத்திச் சென்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (9) மாலை வீதி போக்கு வரத்து பொலிஸார் குறித்த பஸ்ஸினை இடை மறித்ததோடு, அதன் சாரதியை கைது செய்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன், ஆண்டாங்குளம் மற்றும் வட்டக்கண்டல் ஆகிய கிராமங்கில் இருந்து ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி இறக்கும் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மன்னார் ஆடைத்தொழிற்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை (9) மாலை 5.30 மணியளவில் கடமை முடிந்து பணியாளர்கள் ஆடைத் தொழிற்சாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தனியார் பஸ் ஊடாக தமது கிராமங்கள் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன், ஆண்டாங்குளம் மற்றும் வட்டக்கண்டல் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பணியாளர்களும் ஏற்பாடு செய்யப்பட்ட பஸ்ஸில் தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
இதன் போது குறித்த பஸ்ஸின் சாரதி மது போதையில் காணப்பட்டுள்ளதோடு, ஆடைத்தொழிற்சாலையில் இருந்து மன்னார் பஸார் பகுதி வரை குறித்த பஸ் தள்ளாடிய நிலையிலே சென்றுள்ளது.
-மன்னார் பஸார் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த வீதி போக்கு வரத்து பிரிவு பொலிஸார் குறித்த பஸ்ஸினை நிறுத்தி சாரதியை பரிசோதித்த போது குறித்த சாரதி நிறை போதையில் தள்ளாடியமை தெரிய வந்தது.
உடனடியாக பிரிதொரு பஸ்ஸினை ஏற்பாடு செய்த பொலிஸார் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை அதில் ஏற்றி தமது கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பஸ்ஸினை பொலிஸார் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
-மன்னார் பொலிஸ் நிலைய வீதி போக்கு வரத்து பிரிவு பொலிஸாரின் துரித நடவடிக்கையினால் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.