வீட்டின் நிதியமைச்சர்களாக பெண்கள் செயல்பட்டால் குடும்பங்களின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக இயங்கும் என அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்
சௌபாக்யா வாரத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு புதன் கிழமை மாலை பொலிவேரியன் வீட்டுத்திட்ட கலாச்சார மண்டபத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
உள் நாட்டு வளங்களைப்பயன்படுத்தி நமது உற்பத்திகளை அதிகரிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் இங்கு தனி நபர் இலக்கு, கிராமத்தின் இலக்கு, மாவட்டத்தின் இலக்கு, அதன் பின்னர் தேசிய இலக்கு என இலக்குகள் ஒன்றாக இருக்க வேண்டும் இதன் மூலம் உற்பத்திகள் தன்னிறைவடைந்து வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்படல்வேண்டும். இதன் மூலமே இத்திட்டத்தின் இலக்கு பூர்த்தி செய்யப்படும்.
சாய்ந்தமருதுதில் இத்திட்டத்திற்காக நெசவுக்கைத்தறித்துறை தெரிவு செய்யப்பட்டுள்ளது இதில் சாய்ந்தமருது 09,16 மற்றும் 17 ஆகிய 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்து 33 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இதற்கான பயனாளிகளாக பெண்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இது உண்மையில் சந்தோஷமளிக்கின்றது. நமது பிரதேசத்தில் நெசவுக்கைத்தறி வெற்றிகரமான ஒரு திட்டமாக காணப்படுகின்றது .இதில் மருதமுனைக்கிராமத்தை அடையாளப்படுத்திக்கூறலாம். மருதமுனைக்கிராமத்தின் உற்பத்திகள் இன்று மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ளன. நவீன தொழிநுட்பத்துடன் இத்துறையை கட்டியெழுப்ப வேண்டும் .
எமது நாட்டின் வருமானத்தை எமது நாட்டுக்குள்ளேயே செலவு செய்ய வேண்டும் இதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் .இத்திட்டங்கள் யாவும் நிலை பேறான அபிவிருத்தியாக இருக்க வேண்டும். நாட்டின் நிதியமைச்சராக யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் வீட்டின் நிதியமைச்சர்களாக பெண்கள் செயல்பட்டாலையே குடும்பங்களின் நிதி முகாமைத்துவம் சிறப்பாக இயங்கும் .இதில் இவர்கள் படித்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர்,ஏ. சி.எம். பளீல், நிருவாக கிராம உத்தியோகத்தர்,எம்.எஸ்.எம்.நளீர், சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.ஏ.நஜீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்