தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் ‘நானோ வருவேன்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஆரம்பகாலம் முதலே செல்வராகவன்- தனுஷ் கூட்டணி தொடர்ந்து வருகிறது. இந்த கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றிப்பெற்று வருகின்றன. வித்தியாசமாக படங்களை கொடுத்து வரும் செல்வராகவனுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தொடங்கிய இந்த பயணம், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் இணைந்து வெற்றி பெற்றது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். ‘நானே வருவேன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் புதிய தலைப்பை செல்வராகவன் அறிவிப்பார் என கூறப்படுகிறது. எதனால் இந்த தலைப்பு மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி தொடங்கவுள்ளது. தற்போது நடிகர் தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி43’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து திட்டமிட்டப்படி இந்த படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.