மணக்கோலத்தில் நின்ற ஜோடியை கண்டதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து காரில் திருக்குவளை நோக்கி சென்றார்.
திருவாரூர் அருகே பின்னவாசல் மெயின்ரோடு பகுதியில் சென்றபோது அங்கு உள்ள ஒரு திருமண மண்டப வாசலில் மணமக்கள் மாவூரை சேர்ந்த சோப்ரா-ரமா ஆகியோர் முதல்-அமைச்சரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.
மணக்கோலத்தில் நின்ற ஜோடியை கண்டதும் மு.க.ஸ்டாலின் தனது காரை நிறுத்தி மணமக்களை அழைத்து பேசினார். அப்போது அந்த ஜோடியினர், உங்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். பின்னர் அவர்களுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து விட்டு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருக்குவளை சென்றார். அப்போது எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.
திருமண மண்டப வாசலில் முதல்-அமைச்சர் தலைமையில் தங்களது திருமணம் நடந்ததால் புதுமண ஜோடி இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.