15 வயது சிறுமியை இணையத்தளங்களின் ஊடாக பாலியல் தொழிலிற்கான விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று கைதான மாலைதீவு பிரஜை பற்றிய அடையாளம் வெளியாகியுள்ளது. அந்த நாட்டிக் முன்னாள் நிதி அமைச்சர் மொஹமட் அஷ்மாலியே கைது செய்யப்பட்டுள்ளார்.
45 வயதான அஷ்மாலி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூமின் நிர்வாகத்தின் போது நிதி இராஜாங்க அமைச்சராகவும், தொலைத் தொடர்பு நிறுவனமொன்றின் தலைவராகவும் இருந்தார்.
ஒரு ஹோட்டலின் மேலாளர் உட்பட மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் ஜூலை 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தவிசாளர் மற்றும் ஒரு முன்னணி மாணிக்கக்கல் தொழிலதிபர் உட்பட 32 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு மேலாக சிறுமி பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஏராளமான இணையத்தள விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முக்கிய சந்தேக நபர் ஐந்து வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததாகவும், இதுவரை இரண்டு வலைத்தளங்களின் உரிமையாளர்கள் கைது செய்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மீதமுள்ள வலைத்தளங்களின் உரிமையாளர்களை கைது செய்வதற்கான விசாரணை நடந்து வருகிறது.
ஒரு ஹோட்டல் மேலாளர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் 12 பேர் அறைகளை வழங்கிய குற்றச்சாட்டில் தேடப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்