‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி தொடர்பாக சன் டிவி, விஜய் டிவி இரண்டிற்கும் மறைமுகப் போட்டி உருவாகியுள்ளது.
வெளிநாட்டில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. இதுவரை 18 சீசன்கள் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியின் உரிமை ஃபாக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளார்கள்.
இதன் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமத்தைக் கைப்பற்றி, அதற்கான நிகழ்ச்சி தயாராகி வருகிறது. இதில் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி, தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
இதில் தமிழ் நிகழ்ச்சியை சன் டிவியும், தெலுங்கு நிகழ்ச்சியை ஜெமினி டிவியும் ஒளிபரப்பவுள்ளன. தற்போது இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியைத் தமிழாக்கம் செய்து ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதன் முதல் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாகவே சன் டிவி நிறுவனம் ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ நிகழ்ச்சியைத் தொடங்கவுள்ளது. அதற்குப் போட்டியாக ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியையே விஜய் டிவியின் ஹாட்ஸ்டாரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.