நடிகர் அமீர்கான், 2வது இரண்டாவது மனைவியான கிரண் ராவ்வை விவாகரத்து செய்துள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அமீர்கான், பன்முக திறமைக்கொண்டவர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார். அவர் சமீபகாலங்களில் நடித்த 3 இடியட்ஸ், தங்கல், பீ.கே, கஜினி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பல படங்கள் கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.
இவரின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டு முதல் மனைவியான ரீனா தத்தாவை விவாகரத்து செய்தார். இதையடுத்து ‘லகான்’ திரைப்படத்தில் இவர் நடித்தபோது அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ் மீது காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு அவரை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு ஆசாத் என்கிற மகன் உள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான், தனது 2வது மனைவியையும் முறைப்படி விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அமீர் கானும் – கிரண் ராவ்வும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், மகன் ஆசாத் இருவருடனும் இருப்பார் எனவும், இருவரும் முழு சம்மதத்துடன்தான் விவாகரத்து பெற்றோம். இனி கணவன் – மனைவியாக இல்லாமல் நல்ல நண்பர்களாக தொடர்ந்து பயணிப்போம் என்று கூறியுள்ளனர். மேலும், திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவோம் என்றும், இது முடிவல்ல புதிய பயணத்தின் தொடக்கம் என இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் அமீர் கானின் இந்த முடிவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.