குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்காக சென்ற நெல்லையை சேர்ந்த பெண் திடீரென இறந்ததாக செய்தி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள திருவரங்கநேரியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மணி. இவரது மனைவி விமலா. இவர் கடந்த 2019-ம் ஆண்டு, குவைத்திற்கு, வீட்டு வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.
அங்கிருந்து வாரம் ஒருமுறை போனில் பேசி வந்தநிலையில், 2020 செப்டர்மர் மாதம், வீட்டிற்கு போன் செய்த விமலா, தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், தன்னை கொடுமைப் படுத்துவதாகவும் கூறியுள்ளார்.அத்துடன் இதுகுறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் விமலாவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.
எனவே உறவினர்கள், விமலாவை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி, மாவட்ட ஆட்சியர் மற்றும், எஸ்.பி. உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர். ஆனால், இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில், அவர் இறந்து விட்டதாக செய்து வந்துள்ளது.
இதனால் கலக்கம் அடைந்த விமலாவின் குடும்பத்தினர், சாவில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளனர். அத்துடன் விமலாவின் உடலை மீட்டுத் தர வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர்.