கடந்த வாரம் மின்னேரியா தேசிய பூங்காவின் வனவிலங்கு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் மேஜர் ஜெனரல் மற்றும் பிற சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கெக்கிராவ நீதிவான் நீதிமன்ற நீதிபதி சமன் வெரானியகொட நேற்று காவல்துறைக்கு உத்தரவிட்டார். சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கவில்லையென்றும் பொலிசாரிடம் கேள்வியெழுப்பினார்.
கடந்த வாரம் தேசிய பூங்காவிற்குள் நுழைந்த இரண்டு இராணுவ வாகனங்களை நிறுத்த முற்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறு தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகள் குழு தாக்கப்பட்டது.
யானைக் குட்டிகள் திருடப்படும் தகவலையடுத்து நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, பூங்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குழு குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட வனவிலங்கு அதிகாரிகள் பின்னர் ஹபரன காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். படையணியொன்றின் கட்டளையிடும் தளபதியான மேஜர் ஜெனரல் மோகன் ரத்நாயக்க அவரது இராணுவ துருப்புக்களுடன் தாக்கியதாக ஒருவர் குற்றம் சாட்டினார்.
வனவிலங்கு அதிகாரி தன்னை அவமதித்ததாக மேஜர் ஜெனரல் மோகன் ரத்நாயக்கவும் ஹபரண காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டுபிடித்து சரிபார்க்க இரண்டு மூத்த மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான விசாரணைக்குழுவை இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமித்தார்.
இராணுவப் பொலிசாரின் விசாரணைக்கு மேலதிகமாக, அந்த உயர்மட்ட குழுவின் விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் விசாரணை அறிக்கை இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படும் என இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி- மின்னேரியாவில் யானைக்குட்டிகள் திருட்டா?: இராணுவம்- வனஜீவராசிகள் திணைக்களம் முறுகல் உச்சம்!




