மவுண்ட் லவனியாவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சுரண்டியது தொடர்பாக மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மவுண்ட் லவனியா பகுதியில் 15 வயது சிறுமியொருவரை வைத்து, இணையத்தளம் ஊடாக பாலியல் வர்த்தகம் நடந்த சம்பவம் அண்மையில் அம்பலமாகியது.
இதில், சிறுமியை பணத்திற்காக அழைத்து சென்றவர்களில் மிஹிந்தலை பிரதேசசபையின் பிரதி தவிசாளரும் உள்ளடங்குவது தெரிய வந்தது.
இணையத்தள பாலியல் கடத்தல் வளையத்தை நடத்திய முக்கிய சந்தேக நபர், சிறுமியின் தாய் மற்றும் ஒரு பௌத்த பிக்கு உட்பட 18 சந்தேக நபர்கள் நேற்று வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் பின்னர் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிஹிந்தலை பிரதேசசபை பிரதி தவிசாளர், சிறுமியை இணையத்தில் விற்க உதவிய ஒரு தொழிலதிபர், சிறுமியை பணத்திற்காக பெற்ற பாணந்துறையை சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதுவரை 21 பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதான சந்தேக நபர் 3 மாத காலப்பகுதியில் சிறுமியை பல்வேறு நபர்களுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 15,000 மற்றும் ரூ. 30,000 வரை விற்பனை செய்து வந்துள்ளார்.
பாலியல் கடத்தல் வளையத்தில் பங்கேற்ற மற்றும் உதவிய 20 பேரின் விவரங்களை விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர் வெளிப்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
இணையத்தள பாலியல் கடத்தல் வளையம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மீது பாலியல் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.