நடிகர் அர்ஜுன் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து தான் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அர்ஜுன். தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுனுக்கு சென்னையில் விருகம்பாக்கத்தில் சொந்தமாக ஒரு தோட்டம் உள்ளது. அந்தத் தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிரமாண்டமாக ஆஞ்சநேயர் கோயில் ஒன்றைக் கட்டி வருகிறார்.
அந்த கோயிலுக்கு வரும் ஜூலை 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அர்ஜுன் தெரிவித்துள்ளார். தமிழ். கன்னடம். தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பேசி அர்ஜுன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
“இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று சொல்லலாம். தமிழ்நாட்டில் நாங்கள் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோயில் வேலைகள் நிறைவடைந்துள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் ஜூலை 1 மற்றும் 2 திகதிகளில் செய்ய முடிவு செய்துள்ளோம். நிறைய பேரை அழைத்து இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு பண்ணி இருந்தோம். ஆனால் தற்போது கொரோனா நிலைமை இருப்பதால் யாரையும் கூப்பிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இருந்தாலும் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் இந்த விழாவை தவற விடக்கூடாது. யூட்யூபில் லைவ்ஸ்ட்ரீம் ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
எனவே அர்ஜுன் நேற்று முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது முதல்வருடன் அர்ஜுன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.