விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
‘விரதம்’ என்பதற்கு ‘உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல்’ என்று பொருள். இந்த உலகத்தில் உள்ள எல்லா மதங்களும், விரதம் என்ற ஒன்றை குறிப்பிட்ட காலத்தில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. ஏனெனில் விரதம் என்பது, ஆன்மிகத்தையும் தாண்டிய அறிவியல். அது உடலை சீராக்க ஏற்படுத்தப்பட்ட ஆயுதம். இந்து சமயத்தில் உள்ள சில விரதங்களை பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
சோமவாரம்:
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வழிபட வேண்டிய தெய்வம், சிவபெருமான்.
விரதமுறை:- பகல் முழுவதும் விரதம் இருந்து விரதத்தை முடித்து இரவு மட்டும் உணவருந்த வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் காலையில் பால், பழம் சாப்பிடலாம். இந்த நாளில் கணவன்- மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வழிபட்டு வரலாம்.
பலன்:- திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை அமையும். திருமணமானவர் களுக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும்.
பிரதோஷம்:
தேய்பிறை மற்றும் வளர்பிறையில் வரும் திரயோதசி நாளில் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். வழிபட வேண்டிய தெய்வங்கள், சிவபெருமான் மற்றும் நந்தியம்பெருமான்.
விரதமுறை:- சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷத்தை முதலாவதாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமாக பிரதோஷ விரதம் உள்ளது. இந்த விரத நாளில் பகல் உணவை தவிர்க்க வேண்டும். மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து உணவருந்த வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான காலகட்டத்தில் உணவருந்துதல், உறங்குவது, எண்ணெய் தேய்ப்பது செய்யக்கூடாது.
பலன்:- கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை போன்றவற்றில் இருந்தும், பாவங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
சித்ரா பவுர்ணமி:
சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளில் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டிற்குரிய தெய்வமாக சித்ரகுப்தர் இருக்கிறார்.
விரதமுறை:- இந்நாளில், காலை வேளையில் பிதுர் தர்ப்பணம் செய்து, அன்று முழுவதும் உணவருந்துவதை தவிர்த்து, இரவில் மட்டும் சாப்பிட வேண்டும்.
பலன்:- மறைந்த முன்னோர்களின் ஆன்மாக் களுக்கு பாவங்கள் நீங்கி, அவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவார்கள்.
இடப விரதம்:
வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமி திதியில் கடைப்பிடிக்கப்படும் விரதம் இதுவாகும். இந்த விரதநாளில், ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அதோடு நந்தியம்பெருமானையும் பூஜிக்க வேண்டும்.
விரதமுறை:- பகலில் ஒரு பொழுது மட்டும் சாப்பிடலாம்.
பலன்:- குடும்பம் பாதுகாப்பாக இருப்பதை உணர்வீர்கள்.
கல்யாணசுந்தர விரதம்:
பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திர நாளும், பவுர்ணமியும் இணையும் நாளே ‘பங்குனி உத்திரம்.’ இந்த நாளில் சிவபெருமானின் திருமண வடிவமாக கருதப்படும் கல்யாண சுந்தரமூர்த்தியை வழிபட வேண்டும்.
விரதமுறை:- பகல் முழுவதும் இறைவனை நினைத்தும் விரதம் இருந்து, இரவில் சாப்பிடலாம்.
பலன்:- நல்ல வாழ்க்கைத்துணை அமைவதற்கு, இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.
சூல விரதம்:
தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று, இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதுவும் சிவபெருமானை நினைத்து வழிபட வேண்டிய விரதங்களில் ஒன்றுதான். அதுவும் சூலத்துடன் இருக்கும் சிவபெருமானின் படங்களை வீட்டில் வைத்து வழிபட வேண்டும்.
விரதமுறை:- இரவில் மட்டும் சாப்பிடக்கூடாது, காலையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பலன்:- விளையாட்டில் திறமை அதிகரிக்கும்.