Pagetamil
இலங்கை

நேற்றைய (28) அமைச்சரவை கூட்ட முடிவுகள்!

2021.06.28 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம் – 2021

அரச துறையில் நிறைவேற்றுத் தரத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஜப்பான் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்பின் படிப்பை மேற்கொள்வதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் ‘மனிதவள அபிவிருத்தி புலமைப்பரிசிலுக்கான ஜப்பான் உதவித்திட்டம்’ 2010 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இதுவரை 180 பட்டப்பின் படிப்பு வாய்ப்புக்கள் மற்றும் தத்துவார்த்தவியல் பாடநெறிகள் 08 இற்குமான வசதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதம் கற்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள மாணவர் குழுக்களுக்காக 271 மில்லியன் ஜப்பான் யென் (அண்ணளவாக 488 மில்லியன் ரூபாய்கள்) நிதியுதவியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொள்வதற்கான பரிமாற்றக் கடிதத்தை ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்கும், குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கொவிட் 19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கல்

கொவிட் 19 தொற்று நிலைமையால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் துறைகளில் ஒரு சில நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணிக் கொண்டு செல்வதற்காக சலுகை வழங்கும் நோக்கில் தொழில் வழங்குனர்கள், ஊழியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட செயலணி மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்காக அமைச்சரவை இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய அனைத்து ஊழியர்களுக்கும் பணி புரிவதற்காக சமமான வாய்ப்புக்களை வழங்கல், ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமாயின், இறுதியாக செலுத்தப்பட்ட மொத்த மாதாந்தச் சம்பளத்தின் 50 வீதம் அல்லது 14,500/= தொகையில் அதிக நன்மை கிட்டும் தொகையை வழங்கல் மற்றும் குறித்த சம்பளத்திற்காக தொழில் வழங்குனரால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்குப் பணம் செலுத்தல், உலகளாவிய ரீதியில் சர்வதேச விமானப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், குறிப்பாக எமது நாட்டில் சுற்றுலாத் துறையை வழக்கமான வகையில் பேணிச்செல்ல இயலாததுடன், குறித்த துறையில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் சலுகைகளை 2021 யூலை மாதம் தொடக்கம் 2021 டிசம்பர் மாதம் இறுதிவரைக்கும் மேலும் நடைமுறைப்படுத்தும் வகையில் தொழில் உறவுகள் அமைச்சர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

03. வெலிக்கடை சிறைச்சாலையை மீள்கட்டமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பி.சீ.சீ. லங்கா கம்பினிக்குச் சொந்தமான காணியை மீள எடுத்தல்.

வெலிக்கடை சிறைச்சாலையை மீள்கட்டமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட பி.சீ.சீ. லங்கா நிறுவனத்துக்கு சொந்தமான 6 ஏக்கர், 3 ரூட் 8.77 பர்ச்சஸ் காணித்துண்டில் மீள்கட்டமைப்பதற்காக, 2016 யூன் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையை நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஹொரன பிரதேசத்தில் அமைந்துள்ள காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியில் மீளமைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. அதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்திற்கமைய குறித்த காணித்துண்டு பி.சீ.சீ. லங்கா கம்பனியின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துதல் தொடர்பாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களின் உடன்பாட்டுடன் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சேதன மற்றும் இயற்கை உர உற்பத்தி மற்றும் பாவனையின் முக்கியத்துவம் பற்றி தெளிவூட்டுவதற்கான தேசிய மட்டத்திலான ஊடக நிகழ்ச்சித்திட்டம்

இரசாயன உரப் பாவனைக்குப் பதிலாக சேதன மற்றும் இயற்கை உரங்களை விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. இரசாயன உரப் பாவனை, உற்பத்தியை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரே மாற்று வழியென நம்பிக்கை கொண்டிருக்கும் விவசாயிகள் மற்றும் ஏனைய தரப்பினர்களுக்கு அது தொடர்பான உண்மை நிலைமையை விளக்கிக் கூறல், சேதனப் உரப் பாவனையை அதிகரிப்பதற்காக விவசாயிகளிடையே அறிவை மேம்படுத்துவதற்கும், சேதன மற்றும் இயற்கை உர உற்பத்தி, மேம்பாடு போலவே சூழல் நேயமிக்க நிகழ்ச்சிகளுக்காக அனுசரணை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பான துரித விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கமைய, விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏனைய ஏற்புடைய தரப்பினர்களைத் தெளிவூட்டுவதற்காக ஒலி, ஒளி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக குறித்த விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. எம்.வி. எக்ஸ்பிரஸ் – பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயால் இடம்பெற்றுள்ள கடல் மாசுறல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக வசதியளித்தல்

எம்.வி. எக்ஸ்பிரஸ் – பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயால் இடம்பெற்றுள்ள கடல் மாசுறல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்காக தேவையான வசதிகளை மேற்கொள்வதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய நீதி அமைச்சர் அவர்கள், குறித்த ஏனைய அமைச்சர் மற்றும் சட்டமா அதிபரின் பங்குபற்றலுடன் ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது. அதற்கமைய, குறித்த ஆலோசனை வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை கீழ்க்காணும் படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தீயால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்வதற்காகவும் ஐந்து உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

• இழப்பீடு கோரல் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக மும்மொழிகளிலும் பத்திரிகை விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

• சட்டமா அதிபர் அவர்களால் கப்பல் உரிமையாளருக்கும் கப்டனுக்கும் மற்றும் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

• கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தமை தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழி நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகள் மீள வளர்த்தல் மற்றும் வனவளப்பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

• இவ்வகையான விபத்துக்களின் போது நடவடிக்கைகளை மேற்கொண்டு அனுபவம் கொண்ட சட்ட வல்லுனர்களின் சேவையை எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு அவசியமாவதால், அதற்கு பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக விருப்பத் தெரிவிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், 08 சர்வதேச சட்ட நிறுவனங்கள் அதற்காக தமது விருப்பைத் தெரிவித்துள்ளன.

• சட்டமா அதிபர் அவர்களால் குறித்த கப்பலின் காப்புறுதியாளரான லண்டன் நகரிலுள்ள  P&I கழகத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் இடைக்கால இழப்பீட்டுத் தொகையாக 720 மில்லியன் ரூபாய்களை செலுத்துவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீதி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆலோசனைச் செயன்முறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட படிமுறைகள் தொடர்பாக தமது உடன்பாடுகளை வழங்குவதற்கும் சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களிடையே மிகவும் பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான குழுவொன்றை நியமிப்பதற்காக அங்கீகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

06. தானம் பெற்றுக் கொள்வதற்கு சிரமமாகவுள்ள பின்தங்கிய வணக்கத்தலங்களுக்காக தானம் வழங்குதல்

நாடளாவிய ரீதியில் நிலவும் கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் அடிக்கடி விதிக்கப்பட்ட பயணத்தடை காரணமாகவும் அறங்காவலர்களால் தானம் வழங்குவதற்கு சிரமமாகவுள்ள வணக்கத்தலங்களுக்கு உலர் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, லங்கா சதொச லிமிட்டட் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொதிகளை, குறித்த நிறுவனத்தின் விநியோகப் பிரிவால் அடையாளங் காணப்பட்டுள்ள விகாரைகள் மற்றும் வணக்கத்தலங்களுக்கு விநியோகிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. விசேட வைப்புக் கணக்குகளுக்கான மேலதிக வட்டியை வழங்குவதற்காக ஏற்பாடுகளை வகுத்தல்

வெளிநாட்டு நாணயத்தை எமது நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் 2020 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் விசேட நிலையான கணக்கு ஆரம்பிப்பதற்கும் குறித்த கணக்குகளில் காணப்படும் வைப்புக்களைத் தொடர்ந்து பேணுவதற்காகவும் மேலதிக வட்டியை செலுத்துவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் குறித்த கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள ஏற்பாடுகளின் கீழ் 06 மாதம் அல்லது 12 மாத காலத்துடன் விசேட வைப்புக்கணக்குகளில் மீளவும் முதலிடுவதற்கும், அவ்வாறான விசேட வைப்புக்கணக்குகளுக்கான மேலதிக வட்டியை வழங்குவதற்கும் இயலுமை உள்ளது. ஆனாலும், 12 மாதங்களுக்கு அதிகமாக மீளவும் முதலிடப்படும் விசேட வைப்புக் கணக்குகளுக்காக மேலதிக வட்டி வீதத்தைச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் இன்மையால், அதற்காக ஏற்பாடுகளை உள்வாங்கி 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(1) உறுப்புரைக்கமைய கட்டளையை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. எமது நாட்டிற்கு வெளியே இடம்பெறும் அந்நிய செலாவணிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள கட்டளையை தொடர்ந்தும் நீடித்தல்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் அந்நிய செலாவணிச் சந்தைக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளியகப் பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளைகள் செல்லுபடியாகும் காலம் 2021 யூலை மாதம் 01 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதால், அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்படக்கூடிய ஆபத்து நேர்வைக் குறைப்பதற்கும் நிதிப்பிரிவின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணவும் குறித்த கட்டளைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்நிய செலாவணி வெளியகப் பரிமாற்றலின் அடிப்படையில் ஒரு சில மட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை தொடர்ந்தும் 2022 யூலை மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நிதி அமைச்சரராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கை அரசாங்க சர்வதேச பிணைமுறிகளில் முதலிடுவதற்காக இலங்கையில் நிறுவப்பட்டுள்ள கம்பனிகளுக்கு வசதிகளை வகுத்தல்

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் சிலவும் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிணைமுறிகளில் முதலிடுவதற்கு இலங்கைக்கு வெளியே கடன் பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒட்டுமொத்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு சில நிபந்தனைகளுக்கமைய, இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிணைமுறிகளை/ இலங்கை அபிவிருத்தி பிணைமுறிகளைக் கொள்வனவு செய்வதற்காக அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியல்லா நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்கவும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியல்லா நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(1) உறுப்புரையின் கீழ் கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சரராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. 1998 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க இலங்கை நீரியல்வாழ் வேளாண் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத் திருத்தம்

நீரியல்வாழ் வேளாண் ஒழுங்குபடுத்தல்கள், மேம்பாடு மற்றும் முகாமைத்துவப்படுத்தலின் முழு அதிகாரமும் இலங்கை நீரியல்வாழ் வேளாண் அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்குக் கிடைக்கும் வகையில் 1998 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க இலங்கை நீரியல்வாழ் வேளாண் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2017 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார். குறித்த குழுவால் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பரிந்துரைக்கமைய 1998 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க இலங்கை நீரியல்வாழ் வேளாண் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டமும், அதற்கு இணையாக 2006 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தப்பட்ட 1996 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்டம் திருத்தப்பட வேண்டுமெனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, 1998 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க இலங்கை இலங்கை நீரியல்வாழ் வேளாண் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம் மற்றும் 1996 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டத் திருத்தம்

அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டம் சமகாலத் தேவைகளுக்கேற்ப திருத்தம் செய்யப்பட வேண்டுமென நீதி அமைச்சின் விசேட அலகின் குற்றவியல் சட்ட மறுசீரமைப்புக்கான உபகுழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 1921 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா வழங்கும் செயன்முறை தொடர்பாக தற்போதுள்ள வீசா செல்லுபடியாகும் காலத்தை திருத்தம் செய்வதற்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்தம் செய்தல்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வீசா வழங்கும் செயன்முறைக்கமைய சமகாலத்தில் நிலவும் வீசாவுக்கான காலப்பகுதியை திருத்தம் செய்வதற்காக குடிவரவு குடியகல்வு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான அங்கீகாரத்திற்காகவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவைக்கு இதற்கு முன்னர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். குறித்த சட்டமூலம் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் இருப்பின் அது தொடர்பாக அமைச்சரவைக்கு கருத்துக்களை முன்வைக்குமாறு 2021 ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அவர்கள் வேண்டியிருந்தார். அதற்கமைய, குறித்த தரப்பினருடன் நீதி அமைச்சர் அவர்கள் கலந்துரையாடியுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அவ்விதத்திலேயே பாராளுமன்றத்தால் நிறைவேற்றுவது சிறந்தது என அமைச்சரவைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறித்த பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு குடிவரவு குடியகல்வு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் 2021 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. ‘மீட்புப் பதிலளிப்பு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் கருத்திட்டம்’ (RECOVER) இற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளல்

‘மீட்புப் பதிலளிப்பு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் கருத்திட்டம்’ (RECOVER) இனை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிதியில் 84 அமெரிக்க டொலர்கள் ஆசிய பசுபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் கீழும், மிகுதி 66 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன நிதியத்தின் நிரந்தர உள்ளூர் ஒதுக்கீட்டின் கீழும் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் மொத்தச் செலவு 161.85 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆவதுடன், இலங்கை அரசாங்கம் 11.85 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பங்களிக்கின்றது. தடுப்பூசி ஏற்றுவதற்கான செலவுகள், தடுப்பூசி தொடர்பான கண்காணிப்புக் கட்டமைப்பை நிறுவுதல், குளிரூட்டிகளுடன் கூடிய போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல், மற்றும் சிகிச்சைக் கழிவு முகாமைத்துவத்தைப் பலப்படுத்தல் உள்ளிட்ட மேலதிக உப செயற்பாடுகளுக்காக குறித்த கடன் தொகையை பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சரராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. உள்ளூர் கம்பனிகளுக்கு வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கான வசதிகளை வழங்கல்

இலங்கையிலுள்ள உள்ளூர் கம்பனிகளுக்கு வெளிநாட்டு நிதி திரட்டலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனியால் வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயத்தில் பெயர் குறிப்பிட்ட பங்குகள், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியல்படுத்துவதற்கான யோசனை கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க அந்நிய செலாவணிக் கட்டளைகளுக்கமைய, வெளிநாட்டு நாணயத்தில் வெளியிடப்பட்டுள்ள கடன் பத்திரங்களோ அல்லது அடிப்படைப் பங்குகள் அல்லது பங்குலாபம் செலுத்துதல் அல்லது வெளிநாட்டு நாணய பகிர்ந்தளிப்பதன் மூலம் கிடைக்கும் தொகை, வெளிநாட்டு நாணய வர்த்தகக் கணக்குக்கு (Business Foreign Currency Account) வைப்பிலிடுவதற்கு அனுமதியில்லை. இலங்கையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள கம்பனிகள் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காகவும், நாட்டில் வெளிநாட்டு நாணயத்தை கவர்ந்திழுப்பதற்காகவும் அதில் பங்கெடுப்பவர்களை அதிகரிப்பதற்காகவும், இலங்கை ரூபாய் மீதான அழுத்தத்தைக்; குறைப்பதற்காகவும், வெளிநாட்டு நாணயத்தை திரட்டுவதற்காக இலங்கைக் கம்பனிகள் வெளிநாட்டு பங்குச் சந்தைக்கு செல்வதற்குப் பதிலாக மாற்று வழியை உருவாக்குதல் போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை பரிந்துரைத்துள்ளது. அதற்கமைய, குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளை வகுப்பதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கட்டளைகளைத் திருத்தம் செய்து 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(1) ஆம் உறுப்புரையின் கீழ் கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளின் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சரராக கௌரவ பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

Pagetamil

புதிய வடிவில் TELL IGP மற்றும் l-need சேவைகள்

Pagetamil

யாழில் மீளவும் சோதனைச் சாவடிகள்: பொது பாதுகாப்பின் மேல் புதிய கேள்விகள்

east tamil

Leave a Comment