மொறவக்க, கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதிக்குள் விசர் நாய் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று பெண்களையும் நாய் கடித்துள்ளது.
வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பெண்கள் உட்பட 38 பேர் சம்பவத்தின்போது இருந்துள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து வீடு செய்ய தயாராக இருந்துள்ளனர். அவர்களின் உறவினர்கள் சிலரும் அங்கிருந்துள்ளனர்.
விசர் நாய் திடீரென உள்ளே புகுந்து, கடிக்க ஆரம்பித்த பின்னர் சிகிச்சை நிலையத்துக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டபடி கட்டில்மீது ஏறியுள்ளனர். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, வைத்தியசாலை பணியாளர்கள், நோயாளர்கள் இணைந்து நாயை வைத்தியசாலையிலிருந்து வெளியே விரட்டினர்.
வீதிக்கு சென்ற பின்னரும் நாய் அட்டகாசத்தில் ஈடுபட, வீதியில் நின்றவர்கள் நாயை அடித்துக் கொன்றுள்ளனர்.