கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கௌதாரிமுனை-பூவரசன் தீவில் இலங்கை -சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. ஆனால் இதற்கான அனுமதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 நபர்களின் பெயரில் பெறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை பூவரசன் தீவில், கடல் அட்டை பண்ணையை மேற்கொள்ள இங்குள்ள மக்கள் பல தடவைகள் கோரியும் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தற்போது சீனர்கள் அட்டைக் குஞ்சுகளை இங்கு விட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவியபோது, இலங்கை-சீன கூட்டு நிறுவனம் ஒன்று எவ்வித அனுமதியும் இன்றி இங்கு அட்டைக் குஞ்சுகளை விட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தது.
இவ்வாறான பகுதியில் இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அதற்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என அதிகார சபை தெரிவித்தது.
எனினும் கடந்த ஒரு வார காலத்திற்குள் இலங்கை -சீன கூட்டு நிறுவனம் ஒன்றினால் சட்டவிரோதமாக அது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று அவ்விடத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபை தெரிவித்தது.
தாம் ஒத்திகையை மேற்கொண்டதாக இதன்போது சீனர்கள் கூறினாலும், அதனையும் அனுமதியின்றி செய்ய முடியாது என தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
எனினும், யாழ் மாவட்ட கடற்தொழில் நீரியல்வள பணிப்பாளரினால் வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தியே கிளிநொச்சியில் இந்த பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அரியாலைக்கும், கௌதாரிமுனைக்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள சிறிய தீவுப்பகுதி, யாழ் மாவட்ட நிர்வாக எல்லைக்குள் வருகிறது. அதை அண்டிய பகுதியில் இறால் பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அங்கிருந்த சற்று தொலைவில்- கிளிநொச்சி மாவட்ட எல்லைக்குள் இறால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.




