கோவிட் விதிகளை மீறியதற்காக பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மட் ஹான்காக். இதேவேளை அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்துள்ளார்.
சுகாதாரத் துறையின் லண்டன் தலைமையகத்தில் தனது உதவியாளர் ஜினா கொலடங்கேலோவை முத்தமிடும் சிசிரிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, இந்த புதிய நிலைமைகள் உருவாகின.
சம்பவத்தை பற்றி மனைவி மார்த்தாவுக்கு அவர் அறிவித்தார். எனினும், இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவர், சுகாதார அமைச்சரை விட்டு பிரிந்து விட்டார்.
ஹான்காக் தம்பதியின் திருமண வாழ்க்கை 15 ஆண்டுகளில் முடிவடைகிறது.
ஹான்காக் (42) இன்று தனது சஃபோல்க் தொகுதி வீட்டில் இருந்தார், 44 வயதான மார்த்தா லண்டனில் உள்ள குடும்ப வீட்டில் இருந்தார்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி தனது அமைச்சு அலுவலகத்தில் ஒரு உதவியாளரை முத்தமிட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்த மறுநாளே அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஹான்காக் இப்போது கொலடாங்கெலோவுடன் ஒரு உறவில் இருப்பதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது,
1990 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது.
கொலடாங்கெலோவின் கணவர் ஒலிவர் ட்ரெஸ், மனைவியின் இரகசிய உறவு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
“வழிகாட்டுதலை மீறியதற்காக எனது மன்னிப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், மேலும் எனது குடும்பத்தினரிடமும் அன்பானவர்களிடமும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் நான் எனது குழந்தைகளுடன் இருக்க வேண்டும்.” என மட் ஹான்காக் கூறினார்:
ஹான்காக் சனிக்கிழமை மாலை தனது ராஜினாமாவை அறிவித்தார் . முன்னாள் உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட், புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று டவுனிங் தெரு அறிவித்துள்ளது.