இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்ததால் இந்தியா – அரபு எமிரேட்ஸ் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து, அரபு மக்களும், கோல்டன் விசா வைத்துள்ளவர்களும் மட்டுமே, சிறப்பு விமானம் மூலமாக துபாய் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இன்று அரபு எமிரேட்ஸ் அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பயணிகள் குடியிருப்பு விசா வைத்திருப்பதுடன் அரபு எமிரேட்ஸ் பரிந்துரைத்துள்ள சைனோபார்ம், பைசர், ஸ்புட்னிக், அஸ்ட்ரா செனேக்கா ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவதொன்றை 2 டோஸ்களும் போட்டிருக்க வேண்டும்.
விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் ஒருமுறையும், துபாயில் தரையிறங்கிய பின் ஒருமுறையும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா சோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.