நிரவ் மோடி இந்தியாவுக்கு திரும்பி வழக்குகளை சந்திக்க வேண்டும் என்று பிரிட்டன் ஐகோர்ட் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி மீதான விசாரணை தீவிரமடைந்ததால், அவர் கடந்த 2018-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில், அங்கு கைது செய்யப்பட்ட நிரவ் மோடி, லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால், அவர் இந்தியாவுக்கு திரும்பி அந்த வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறினார். நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் உத்தரவிட்டார்.
அதன்பின்னர், நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி பிரிட்டன் ஐகோர்ட்டில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. இதனால் நிரவ் மோடியை நாடு கடத்தும் பணியை அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.