தமிழ், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, பாகுபலி வெப் தொடரில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இதில் பிரபாஸ், நாசர், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து இருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.
தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் தொடராக தயாராகிறது. பாகுபலியில் ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் வந்த ரம்யாகிருஷ்ணனின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த தொடரை எடுக்கின்றனர்.
பாகுபலி பட காட்சிகளுக்கு முந்தைய சம்பவங்கள் இந்த தொடரில் இடம்பெற உள்ளன. இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 தொடரில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனை கருத்தில் கொண்டு அவரை அணுகி உள்ளனர். ஆனால் நடிகை சமந்தா, இந்த வெப் தொடரில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.