யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தமிழர்களின் உரிமையை, இலங்கை அரசாங்கம் தடை செய்வதை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாளர் கடுமையாக கண்டித்துள்ளார்.
இலங்கையில் சிறுபான்மையினர் மீதான கெடுபிடிகள், அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை சிதைக்கும் விதமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் தொடக்கத்தில், நேற்று உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.
அவர் தனது தொடக்க உரையில், “இலங்கையில், சிறுபான்மையின முஸ்லிம்களை குறிவைப்பதாக கருதப்படும் மற்றும் தமிழர்களை துன்புறுத்தும் அரசாங்க நடவடிக்கைகளால் நான் கவலைப்படுகிறேன்.
இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறதுஎன சுட்டிக்காட்டினார்.
300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் குழுக்கள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி பட்டியலிடுதல் / அல்லது தடைசெய்வது உள்ளிட்ட சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகளும் நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என்றும் அவர் கூறினார்.
ஒரு முழுமையான, உடனடி மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும், ”என்று பேச்லெட் கூறினார்.
தற்போதைய பயங்கரவாத தடைச்சட்ட விதிகளின்படி, கைது செய்யப்படுபவர் இரண்டு ஆண்டுகள் வரை நிர்வாக உத்தரவின்படி தடுத்து வைக்கப்பட கூடிய சூழல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலிசாரால் தடுத்து வைக்கப்படுபவர்கள் உயிரிழப்பது குறித்த தகவலையையும், அது தொடர்பான விசாரணைகளின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்ந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவை பேச்சில் ஈடுபடும் என்றும், புதிய பொறுப்புக்கூறல் ஆணையை அமல்படுத்துவதில் முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்களின் புதுப்பிப்புக்களை செப்டம்பர் அமர்வில் சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.