சோமாலியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள டைன்சூர் நகரில் உள்ள இராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர்.
சோமாலியாவில் இராணுவ தளத்தை குறிவைத்து நடந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு இராணுவ வீரர்கள், பொலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறி வைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சோமாலியாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள டைன்சூர் நகரில் உள்ள இராணுவ தளத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் இராணுவ தளத்தை சுற்றி வளைத்தனர். ஆனால் இராணுவ வீரர்கள் விரைவாக செயல்பட்டு இந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தனர். இராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் 24 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பல பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். இராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்.