விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி 2’. இந்த ஆண்டு ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இதுதான். இதில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, பவித்ரா மற்றும் கோமாளிகளாகக் கலந்துகொண்ட சிவாங்கி, புகழ், பாலா உள்ளிட்ட அனைவருக்குமே தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இதில் அஸ்வின், சிவாங்கி, இருவருக்கும் இணையத்தில் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்கள் பெயரில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பக்கங்கள் உருவாக்கப்பட்டு அவர்கள் இருவர் குறித்த தகவல்கள், காணொலிகள் பகிரப்படுவதுண்டு. சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’, உதயநிதி நடிக்கும் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அதே போல அஸ்வின் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர குறும்படங்கள், இசை ஆல்பம் போன்றவற்றிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் யூட்யூப் பக்கம் ஒன்று அஸ்வின் – சிவாங்கி இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக தவறான தகவல் ஒன்றை பகிர்ந்து அத்துடன் அவர்களுக்கு திருமணம் ஆனதைப் போல ஒரு வீடியோவை மார்ஃப் செய்து வெளியிட்டிருந்தது. இதனை பலரும் பகிர்ந்து வந்தனர்.
இத்தகவல் முற்றிலும் தவறானது என்று அஸ்வின் – சிவாங்கி இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளக்கமளித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
அஸ்வின்: மார்ஃப் செய்யப்பட்ட சில வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை அனைத்தும் எனது பெயரை கெடுப்பதற்காக பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். எந்த ஒரு சக நடிகையையும் நான் காதலிக்கவில்லை. நான் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதல் கட்டத்தில இருக்கிறேன். என்னுடைய தற்போதைய கவனம் வேலையில் மட்டுமே இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவாங்கி: என்னையும் என் சக நடிகர் ஒருவரையும் வைத்து மார்ஃப் செய்யப்பட்டு வைரலாகும் படங்கள் உண்மைக்கு புறம்பானவை. அது போன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.