ஒடிஷாவை சேர்ந்த பிரபல பாடகியான தபு மிஸ்ரா கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் தபு மிஸ்ரா. குலநந்தன் என்கிற படம் மூலம் ஒடியா திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். அவர் சுமார் 150 படங்களில் பாடியிருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளாக பாடி வந்த அவர் சினிமா பாடல்கள் தவிர்த்து பக்திப் பாடல்களும் பாடியிருக்கிறார்.
தபுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மே மாதம் 19ம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 36.
முன்னதாக தபுவின் தந்தையும் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மே மாதம் 10ம் திகதி உயிரிழந்தார். மே மாதம் 19ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தபுவின் ஆக்சிஜன் அளவு 45க்கு குறைந்ததை அடுத்து வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவரின் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தபுவுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தபோதிலும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார்.தபுவுக்கு எக்மோ சிகிச்சை அளிக்க அவரை கொல்கத்தாவுக்கு அழைத்துச் செல்ல குடும்பத்தார் திட்டமிட்டார்கள். இதையடுத்து தபுவின் சிகிச்சைக்காக மாநில கலாச்சாரத் துறை ரூ. 1 லட்சம் நிதி அளித்தது. மேலும் ஒடியா திரையுலகை சேர்ந்தவர்களும் தபுவின் சிகிச்சைக்காக நிதி திரட்டத் துவங்கினார்கள்.
தபு மிஸ்ராவின் மரண செய்தி அறிந்த பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிரபல ஒடியா பாடகி தபு மிஸ்ராவின் மறைவு குறித்து அறிந்து கவலை அடைந்தேன். ஒடியா இசை உலகில் அவரின் நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும். அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.