நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
துணை நடிகையும் மலேசியா தூதரக அதிகாரியுமான சாந்தினி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புகாரை கொடுத்தார். அதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் மணிகண்டன் மீது சாந்தினி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் சாந்தினியை தனக்கு யாரென்றே தெரியாது என மணிகண்டன் தெரிவித்திருந்தார். மேலும் ஏதோ பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது சாந்தினி பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சாந்தினியின் வீட்டிற்கு மணிகண்டன் அடிக்கடி வந்து சென்றது அம்பலமானது.
இதையடுத்து மணிகண்டனின் உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணைநடத்தப்பட்டது. இதனிடையே தலைமறைவாக இருந்த மணிகண்டனிடம் விசாரணை நடத்த இரு தனிப்படைகள் அமைத்து ராமநாதபுரத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருப்பினும் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டன் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் இன்று காலை அவரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அவரை எங்கு வைத்து போலீஸார் கைது செய்தனர். அவரை எங்கு வைத்து விசாரணை நடத்திவருகிறார்கள் போன்ற விஷயங்கள் தெரியவில்லை. அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.