மலையாள இயக்குனர் சச்சி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவி சிஜி சச்சி அவர் இயக்கத் திட்டமிட்டிருந்த கனவுத் திரைப்படங்கள் சிலவற்றைக் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.
மலையாளத் திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சச்சி. முக்கியமாக சிறந்த திரைக்கதை எழுத்தாளர். மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன பல படங்களுக்கு சச்சி திரைக்கதை எழுதியுள்ளார். பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் சச்சி இயக்கத்தில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. துரதிருஷ்டவசமாக அது தான் அவர் இயக்கிய கடைசி படமாக அமைந்துவிட்டது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 18-ம் திகதி இயக்குனர் சச்சி மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில் சச்சியின் மனைவி சிஜி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதில் சச்சி இயக்குவதாக இருந்த கனவுப் படங்கள் குறித்து அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் மம்மூட்டி, பிரித்விராஜ், டோவினோ தோமஸ் மற்றும் ஆசிப் அலி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் பிரம்மாண்ட படம் ஒன்றிற்கு கதை எழுதியிருந்தாராம். அந்தப் படத்திற்கு ப்ரிகாண்ட் என்று தலைப்பும் வைத்திருந்தாராம். அந்த படம் மிகவும் அற்புதமான படம் என்றும் சஜி தெரிவித்துள்ளார்.
அந்தப் படத்தை அடுத்து சச்சி அஜித்துடன் கூட்டணி அமைக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் கதைக்களம் தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டதாம். அய்யப்பனும் கோஷியும் படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் சச்சிக்கு போன் செய்து கொச்சியில் அவரைச் சந்திக்கலாமா? என்று கேட்டாராம். ஆனால் சச்சியின் மோசமான உடல்நிலை மற்றும் கொரோனா காரணமாக அந்தச் சந்திப்பு தள்ளி போய் உள்ளது. மேலும் தானே வந்து சென்னையில் உங்களைச் சந்திக்கிறேன் என்று சச்சி அஜித்திடம் கூறினாராம்.
அய்யப்பனும் கோஷியும் படத்தால் ஈர்க்கப்பட்ட அஜித் சச்சி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சச்சியும் அதை ஏற்றுக்கொண்டு ஒரு கதை எழுதியதாகவும் கூறப்படுகிறது ஆனால் அவரது திடீர் மறைவால் அந்தப் படத்தின் கதை கூட தயார் ஆகவில்லை என்று சிஜி தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட்டில் அமீர்கானுடன் இணைந்து காளிதாசன் கதையை அடிப்படையாக வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை சச்சி இயக்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.இப்படிப்பட்ட நல்ல கலைஞரை இழந்ததை அடுத்து மலையாளத் திரையுலகினர் பலர் அவரை நினைவு கூர்ந்தனர்.