28.5 C
Jaffna
October 22, 2021
தமிழ் சங்கதி

சுளையாக அள்ளும் திட்டமா?; வழி தெரியாமல் சென்று சிக்கினாரா?: சீனாவுடன் செல்வம் ஒட்டியதன் காரணம் என்ன?

இலங்கை சீன நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களில் ஒருவராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவாகியிருப்பது, அரசியலரங்கில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக, இந்திய தரப்பு இதனை இரசிக்கவில்லை, செல்வத்திற்கு புரியும் மொழியில் டோஸ் கொடுத்தது என்றும் அரசல் புரசலாக தகவலுண்டு.

கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி, நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இலங்கை- சீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றது. இதில் தலைவராக நாமல் ராஜபக்ச தெரிவானார்.

ராஜபக்ச குடும்பத்திற்கும் சீனாவிற்குமுள்ள நெருக்கம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதனால் இந்த தெரிவில் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.

சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்த, உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், அரவிந்தகுமார், உபுல் கலபதி தெரிவாகினர்.

முதலில் இப்படியான சங்கத்தின் நிர்வாக தெரிவுகள் எப்படி இடம்பெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இப்படியான நட்புறவு சங்கத்தின் நிர்வாக தெரிவுகள் பெரும்பாலும் முன்னரே திட்டமிடப்பட்டவையாகவே இருக்கும்.

ஒரு நட்புறவு சங்கத்தை உருவாக்க விரும்பும் தரப்பு, முதலிலேயே பதவி நிலைகளை தீர்மானித்து விட்டு, அதை கூட்டத்தில் நிறைவேற்றுவார்கள்.

இப்படியான நிறைய சங்கங்கள் இருப்பதால், இவற்றில் யாரும் மல்லுக்கட்டுவதில்லை. சபாநாயகரும், நிலைமையை தெரிந்து, அதற்கேற்ப நிர்வாக தெரிவிற்கு தலைமை வகிப்பார்.

செல்வம் எப்படி இதற்குள் சிக்கினார்?

இலங்கை விவகாரத்தில் சீனாவின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை. சீனாவின் தலையீடு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியிலும் வேறு அபிப்பிராயங்கள் இருப்பினும், ஆட்சியாளர்களுடனான சீனாவின் நெருக்கம் காரணமாகவும், தமிழர்களின் இந்திய நெருக்கம் காரணமாகவும், சீனாவையும், தமிழர்களையும் இடைவெளி விட்டே நோக்கப்படுவது வழக்கம்.

நிலைமை இப்படியிருக்க, இலங்கை- சீனா நட்புறவு சங்கத்தின் உப தலைவர்களாக இரண்டு சிறுபான்மையினர் தெரிவாகியுள்ளனர்.

வடக்கில் இருந்து செல்வம் அடைக்கலநாதனும், மலையகத்தில் இருந்து அரவிந்தகுமாரும் தெரிவாகியுள்ளனர்.

இது, நிச்சயம் இந்தியாவை அசௌகரியப்படுத்தும் என்பதை எதிர்பார்க்கலாம்.

நட்புறவு சங்க தெரிவுகளில் அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதிகள், இந்த தெரிவுகள் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் நடக்க வாய்ப்பில்லையென அடித்து சொல்கிறார்கள். அதாவது, செல்வம் அடைக்கலநாதன் தரப்பினர் முன்னரே  இந்த தெரிவு பற்றி கலந்துரையாடியிருப்பார்கள் என அடித்து சொல்கிறார்கள்.

வழி தவறி சென்றாரா?

இந்த விவகாரம் அண்மைய நாட்களில் சர்ச்சையானதையடுத்து, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டு இது பற்றி பேசிள்ளனர்.

அப்போது செல்வம் அடைக்கலநாதன் ஒரு சுவாரஸ்யமான பதிலை கூறியிருக்கிறார்.

“நான் அங்கே நின்றேன். கஜேந்திரன் எம்.பியும் வந்தார். என்னையும் வரும்படி அழைத்தார். போய்விட்டேன்“ என கூறியுள்ளார்.

இலங்கை- சீனா நாடாளுமன்ற நட்புறவு குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அவதானித்தால், செல்வம் அடைக்கலநாதன் வழிதவறி போகவில்லை, முன்னரே திட்டமிட்டபடிதான் சென்றார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இதேவேளை, இந்த தெரிவு நடப்பதற்கு சில நாட்களின் முன்னர் கொழும்பில் அடையாளத்தை வெளிப்படுத்த முடியாத ஒருவருடன் பேசிய ரெலோ பிரமுகர் ஒருவர், இலங்கை- சீனா நாடாளுமன்ற நட்புறவு சங்கம், அதில் அங்கம் வகிப்பதால் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றி விசாரித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் சீன நட்புறவு கொள்வதற்கும், அந்த பிரமுகர் பேசியதற்கும் இடையில் தொடர்பிருக்கிறதா என்பது தெரியாது என்றுதான் நாம் சொல்லலாம். ஆனால், கொஞ்சம் சிந்திப்பவர்களிற்கு விடயம் புரியும்.

இந்தியா டோஸ்

செல்வம் அடைக்கலநாதன் இந்த பொறுப்பை ஏற்றதை இந்தியா இரசிக்கவில்லை.  செல்வம் அடைக்கலநாதனிற்கு புரியும் மொழியிலேயே இந்திய இராஜதந்திரியொருவர் டோஸ் கொடுத்ததாகவும் ஒரு தகவலுண்டு.

எனினும், ரெலோவை நன்கறிந்தவர்கள், இப்படியான குறுக்கோட்டங்களால் அதிர்ச்சியடைய மாட்டார்கள்.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் இப்படி நடந்தது.அப்போது சந்திரிகா பண்டாரநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியிலிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் சந்திரிக்காவை ஆதரித்தன. ரெலோ மட்டும் காமினியை ஆதரித்தது. அவருக்காக பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.

கூட்டமாக ஒரு பக்கம் நிற்கும் போது, வரும் “உபசரிப்புக்கள்“ பல பங்காக பிரிந்து விடும். தனித்து ஒரு பக்கம் நின்றால் சுளையாக அள்ளலாமென ஏதும் கூட்டல் கழித்தல் கணக்கை ரெலோ பார்க்கிறதோ தெரியவில்லை.

 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Related posts

பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல்?

Pagetamil

கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீள இணைய முயற்சி!

Pagetamil

விக்னேஸ்வரனையும், கஜேந்திரகுமாரையும் முகம் பார்க்க வைக்க வரும் சிங்கள பெண் பிரபலம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!