கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஜேர்மனி உள்துறை அமைச்சகம் தரப்பில், “தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு சுற்றுலா சத்தியமாகிறது. வரும் ஜூன் 25 ஆம் திகதி முதல் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜேர்மனிக்குள் அனுமதிக்கப்படுவர்.
சுற்றுலாப் பயணிகள் தங்களது இரண்டாவது டோஸை ஜேர்மனி வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே போட்டு இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஜேர்மனி முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இத்தாலி உள்ளது.
ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன.
இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.