பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உச்சி மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவரும் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை இணக்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாக இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில்,“ நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பெரிய கட்டத்தையும் நாம் ரஷ்யாவுக்கு கொடுத்தோம். ஆனாலும் நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. நம்பமுடியாத மதிப்புமிக்க ஒன்றை நாம் விட்டுவிட்டோம். ரஷ்யாவுக்கு நாம் பல சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளோம். அதற்கு பிரதிபலனாக நமக்கு எதுவும் கிடைக்கவில்லை” என கூறினார்.