கொரோனா மூன்றாம் அலை தாக்குதலின் போது குழந்தைகளில் நலனில் கவனம் அவசியம் என தாய் சேய் நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்போதிலிருந்தே மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனாவை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
மூன்றாம் அலை கொரோனாவின் போது சிறு குழந்தைகள் அதிக அளவில் பாதிப்பு அடையலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அரசு சோதனைகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதுவரை குழந்தைகளுக்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதையொட்டி தாய் சேய் நல மருத்துவர்கள், “குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே பெற்றோர்கள் குழந்தைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவெளியில் விளையாட அனுமதிப்பதையும் வெளியே அழைத்துச் செல்வதையும் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளனர்.