13வது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்களே வழங்கப்பட்டன.இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுவதை பார்க்கமுடிகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோமென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று அவரது இல்லத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றுநோய் காலகட்டத்தில் எல்லா நாடுகளும் முடக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு வேலைகளை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அண்மையில் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது .அதன் பின்னர் மாகாண சபைகள் எல்லாமே இல்லாமல் உள்ள சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு இருக்கின்ற சூழலில் மாகாண அதிகாரங்களை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய பல முக்கியமான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன.
இப்போது வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய மாவட்ட வைத்தியசாலைகளில் மன்னார், வவுனியா ,முல்லைத்தீவு ,கிளிநொச்சி போன்ற மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வைத்தியசாலைகள் மத்திய அரசு கையகப்படுத்த முழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு அது நிறைவு பெற்றுள்ளது .
அரசாங்கம் ஐநா சபைக்கு இந்தியாவிற்கு தாங்கள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவோம் என கூறிக்கொண்டு இப்பொழுது உள்ள அதிகாரங்களை விட மேலதிகமான அதிகாரங்களை வழங்குவோம் என கூறிக்கொண்டு இப்பொழுது இருக்கக்கூடிய அதிகாரங்களையும் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்ற நிலையையே எங்களால் பார்க்க கூடியதாக உள்ளது .
முக்கியமாக இந்த வைத்தியசாலைகளை பறிப்பதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஏற்கனவே மத்திய அரசின் கீழ் உள்ள நிலையில் வடமாகாணத்தில் உள்ள மாவட்ட வைத்திய சாலைகள் அனைத்தையும் மத்திய அரசு கையகப்படுத்தி இருக்கின்றது .
மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து உண்மையாகவே மாகாணத்திலுள்ள முற்றுமுழுதான அதிகாரங்களை பறித்தெடுத்து தமிழ் மக்களுக்கு என்ன காரணத்திற்காக போராடினார்களோ அதனை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.
குறைந்தபட்சம் ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தம் ஊடாக சில அதிகாரங்கள் வழங்கப்பட்டது .ஆனால் இந்த அதிகாரங்கள் இப்பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான கபடத்தனமான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென இந்திய அரசிடம் நாம் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
ஏற்கனவே இலங்கையில் மாகாண சபை உருவாக்கப்பட்டது என்று சொன்னால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக அது ஏற்பட்டது. அதன் மூலம் 13வது திருத்தத்தின் ஊடாக குறைந்தபட்ச அதிகாரங்கள் வழங்கப்பட்டன.இந்த அதிகாரங்கள் இப்போது பறிக்கப்படுவதை பார்க்கமுடிகின்றது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கூட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் .மிக விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
குறைந்தபட்சம் இந்த அதிகாரங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் இதனுடைய தாற்பரியத்தை உணர்ந்து அரசாங்கம் மேற்படி நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அச்சத்தில் உறைந்து இருக்கின்ற சூழலில் ராணுவத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் அவர்களை வைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அளவீடு செய்து அதனை சுவீகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ஆகவே வெறுமனே பாடசாலைகள் வைத்தியசாலைகளை மத்திய அரசு எடுப்பது என்பதற்கப்பால் காணிகளை இராணுவ உத்தியோகத்தர்களை வைத்து அளவீடு செய்து அதனை பறிமுதல் செய்கின்றனர்.
ஆகவே சகல நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் நிறுத்த வேண்டும் .
இலங்கை ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தை ஒன்று நேற்றைய தினம் நடக்க இருந்ததாகவும் அது நேற்று முன்தினம் மாலை தீடிரென நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் இப்போது சொல்லப்படுகின்றது. கடந்த 8ஆம் திகதி சம்பந்தன் அவர்களுக்கு பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அந்தப் பேச்சு வார்த்தைக்கான அழைப்பினை திரு சம்பந்தன் அவர்கள் கோரிக்கைக்கு இணங்க ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 15ம் திகதி வரை அவ்வாறான ஒரு பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகங்களோ பொதுமக்கள் யாரும் அறிந்திருக்கவில்லை .அது மாத்திரமல்ல என்ன விடயங்களை பேசப்போவதென தமிழ் கட்சிகளும் அறிந்திருக்கவில்லை. ஒட்டுமொத்தமாக இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அவர்களுக்கு ஆதரவாக அந்த ஆட்சியினுடைய பங்குதாரர்களாக இருந்து ஒரு அரசியல் சாசனத்தை கூட நிறைவேற்ற முடியவில்லை.
முன்னர் இருந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் குறித்தான அதிகாரங்கள் தொடர்பான எந்தவித நடவடிக்கைகளும் இவர்களால் மேற்கொள்ளப்படாமல் முடியாமல் இருந்த சூழ்நிலையில் இன்று கோட்டாபய ராஜபக்சவின் அரசுடன் தாங்கள் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக பேசவிருப்பதாக க இப்போது கூறுவது நிச்சயமாக தமிழ் மக்களிடம் கேள்வியை எழுப்பி இருக்கின்றது .
பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் ஆனால் நிச்சயமாக அந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த கூடிய தமிழ் கட்சிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். என்ன விடயங்களைப் பற்றிப் பேசப் போகிறார்கள் என்பது தெரிந்திருக்க வேண்டும் அது மாத்திரமில்லாமல் தமிழ் புத்திஜீவிகளுக்கும் இந்த விடயம் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.