நஸ்ரியா தன் வாழ்வில் வந்த பிறகே தான் சாதிக்கத் துவங்கியதாக ஃபஹத் ஃபாசில் உருக்கமாக தெரிவித்துள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவர் மனைவியை பாராட்டியிருக்கிறார்.
அஞ்சலி மேனன் இயக்கிய பெங்களூர் டேஸ் படத்தில் நடித்தபோது நஸ்ரியா மீது ஃபஹத் ஃபாசிலுக்கு காதல் ஏற்பட்டது. அந்த படத்தில் கணவன், மனைவியாக நடித்தார்கள். இந்நிலையில் பெங்களூர் டேஸ் படம் ரிலீஸாகி 7 ஆண்டுகள் ஆனது, நஸ்ரியாவிடம் காதலை சொன்னது, திருமண வாழ்க்கை, சாதனைகள் குறித்து ஃபஹத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, பெங்களூர் டேஸ் வெளியாகி 7 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் பல நல்ல விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது என்றார்.
ஃபஹத் மேலும் கூறியதாவது, நஸ்ரியா மீது காதல் ஏற்பட்டது, அவருடனான பயணம் துவங்கியது அப்பொழுது தான். நஸ்ரியாவுக்கு நான் கடிதம் எழுதி, ஒரு கவரில் மோதிரம் வைத்து கொடுத்தேன். ஆனால் அவர் சரி என்று சொல்லவில்லை. அதே சமயம் முடியாது என்றும் கூறவில்லை. நான் பெங்களூர் டேஸ் படத்தில் நடித்தபோது வேறு இரண்டு படங்களிலும் நடித்து வந்தேன். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பது ஆபத்து. அப்பொழுது பெங்களூர் டேஸ் ஷூட்டிங்கிற்கு திரும்பி வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பேன் என்றார்.
நஸ்ரியா அருகில் இருப்பது பிடித்திருந்தது. எனக்காக நஸ்ரியா நிறைய விஷயங்களை கைவிட வேண்டியிருந்தது. அதை நினைத்து கவலைப்பட்டேன். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தபோது, ஹலோ நீங்க யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என நஸ்ரியா கேட்டார். எங்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் தற்போதும் நான் டிவி ரிமோட்டை பாத்ரூமில் வைத்துவிட்டு வந்தால், யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நஸ்ரியா கேட்பார் என்கிறார் ஃபஹத்.
நானும், நஸ்ரியாவும் சேர்ந்து வேலை செய்கிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம். எது நடந்தாலும் சேர்ந்து இருக்கிறோம். என் வாழ்வின் அனைத்து சாதனைகளும் நான் நஸ்ரியாவுடன் என் வாழ்க்கையை பகிர்ந்த பிறகே நடக்கத் துவங்கியது. இது எதையுமே நான் தனியாக செய்யவில்லை. நஸ்ரியா சரி என்று சொல்லாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று வியக்கிறேன் என ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார்.