அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீ ஒரு வாரத்துக்கு மேல் நீடித்தது. இதில் சுமார் 10 லட்சம் ஏக்கர்கள் அதாவது 1,562 சதுர மைல்கள் அல்லது 4,096 சதுர கி.மீ., நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
13,700 தீயணைப்பு வீரர்களும், தேசிய காவல்படை மற்றும் அமெரிக்க ராணுவமும் காட்டுத்தீயின் உக்கிரத்தைத் தணிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது கலிபோர்னியாவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ள வென்ச்சுரா வட்டாரத்தில் தீயணைப்புப் பணிகளில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுகிறது.
தென்கிழக்கு கலிபோர்னியா, சான்டா பார்பரா வட்டாரக் கரையோரப் பகுதி ஆகியவற்றிலும் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு சிகப்புக் கொடு எச்சரிக்கையான, அதி தீவிர காட்டுத்தீ எச்சரிக்கையை, அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவின் பெரும்பாலான இடங்களில் இரு வாரங்களாக கூடுதலான வெப்பநிலை பதிவானது.
இதனால் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வில்லை என்றால், கடந்த ஆண்டைப் போல் மிகப் பெரிய காட்டுத்தீயாக வரலாற்றில் இது பதிவாகக் கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.